Last Updated : 06 Aug, 2023 09:52 PM

 

Published : 06 Aug 2023 09:52 PM
Last Updated : 06 Aug 2023 09:52 PM

“சிறுதானிய விவசாயத்தில் நிறைய சவால்கள் உண்டு” - பெண் விவசாயி வெண்ணிலா பகிர்வு

சென்னை: "சிறுதானியங்களை அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கிப் பயன்படுத்தும்படி அதை பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதை அரசாங்கங்கள் விரிவுபடுத்த வேண்டும்." என்று ஐ.நா.வின் எஃப்ஏஓ துணை பிரதிநிதி கொண்டா ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

“வலிமையான சிறுதானியங்கள் - உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்துக்காக” என்ற பெயரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 3 நாட்கள் கருத்தரங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. சென்னை தரமணியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறு தானியங்களால் உருவாக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுதானிய விவசாயி வெண்ணிலா சிவகுமார் 'இந்து தமிழ் திசை'க்காக அளித்தப் பேட்டியில், “பாரம்பரிய விவசாயத்தில் இருப்பதுபோல் சிறுதானிய விவசாயத்திலும் நிறைய சவால்கள் உண்டு. அதில் பிரதானமானது அதிக மகசூலை எப்படிப் பெறுவதே என்பதாக இருந்தது. இந்தச் சூழலில் தான் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை மூலம் சிறுதானிய விவசாயத்துக்கு என்றே பிரத்யேகமாக நடவு இயந்திரம், களை வெட்டும் இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரம் ஆகியனவற்றை வழங்குகின்றனர்.

கொல்லி மலையில் மட்டும் 14 பஞ்சாயத்துகளில் 26 விதை வங்கிகள் மூலம் சிறு தானிய விதைகளை வழங்குகின்றனர். இதன் மூலம் எங்களால் விவசாயப் பணிகளை குறைந்த ஆட்களைக் கொண்டு எளிதாக செய்துவிட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் நாங்கள் விளைவிக்கும் சிறு தானியங்களை நாங்களே மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறோம். மகளிர் குழுக்கள் மூலம் ராகி மாவு, ராகி மால்ட் போன்ற பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறோம். கரோனா காலத்தில் சற்று முடங்கிய இத்தொழில் தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

நான் தமிழ் இலக்கியத்தில் பிஎட் பட்டம் பெற்றேன். இருப்பினும் எனது குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் எனக்கு இந்தத் தொழில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் இதனைக் கையில் எடுத்தேன். இப்போது சிறுதானியாங்கள் மீது மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது” என்றார்.

ஐ.நா.வின் அங்கமான எஃப்ஏஓ (உணவு மற்றும் வேளான்மை அமைப்பு) துணை பிரதிநிதி (ஆசியா பசிபிக் பிராந்தியம் - இந்தியா) கொண்டா ரெட்டி சாவா 'இந்து தமிழ் திசை'க்கு அளித்தப் பேட்டியில், “சிறுதானியங்கள் பற்றி முதலில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் தாத்தா காலத்தில் சிறுதானியங்கள் பரவலாக உண்ணப்பட்டன. பின்னர் அரிசி உணவுக்கென்று என்று ஓர் தகுதி உருவாக்கப்பட்டது. அதனால் அனைவரும் அரிசிக்கு மாறினர். உண்மையில் சிறுதானியங்கள் அதிக ஊட்டச்சத்து கொண்டவை. பருவநிலை மாறுபடும் சூழலில் நமக்கான உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யக் கூடியவை.

வறண்ட, பகுதி வெப்ப பிராந்தியங்களில் விளைவிக்கக் கூடியவை. அதனால் நாம் சிறுதானியங்கள் பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதன் விளைச்சல் பகுதியை அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் மத்தியில் சிறுதானியங்களை உண்ணும் பழக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்கள் தான் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க இயலும். அதுமட்டுமல்லாது சிறுதானியங்களை பயன்படுத்துவது பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது இளைஞர்கள் கூட சிறுதானிய உணவின் பக்கம் திரும்பக்கூடும்.

அதுபோல் சிறுதானியங்களை அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கிப் பயன்படுத்தும்படி அதை பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதை அரசாங்கங்கள் விரிவுபடுத்த வேண்டும். விழிப்புணர்வு, விளைச்சலை அதிகரித்தல், பொது விநியோகத்தில் சிறு தானியங்களை வழங்குதல் ஆகிய மும்முனை அணுகுமுறை மூலம் சிறுதானியங்களை அனைவருக்கும் சாத்தியமாக்கலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x