Last Updated : 17 Jul, 2023 08:38 PM

 

Published : 17 Jul 2023 08:38 PM
Last Updated : 17 Jul 2023 08:38 PM

வேலூரில் அழிந்து வரும் கோரைப்பாய் தொழில் மீளுமா?

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அழிந்து வரும் ‘கோரைப்பாய்’ உற்பத்தியை மீட்டெடுக்க தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பாய் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து உறங்கினால் நிம்மதியான உறக்கமும், உடல் சூட்டையும் தணிக்கும் என்பதால் நம் முன்னோர்கள் வீடுகளில் தாவரங்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட பாய் வகைகளை பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் நாகரீக வளர்ச்சி எனக்காரணம் காட்டி, பிளாஸ்டிக் பாய்கள், பஞ்சு மெத்தை உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்த தொடங்கியதால் பாரம்பரியமிக்க பாய் தயாரிக்கும் தொழில்கள் தமிழகத்தில் நலிவடைந்து வருகின்றன. கோரைப்பாய் வகைகளில் படுக்கை பாய், பந்திப்பாய், திருமண வரவேற்பு பாய், குழந்தைகள் பாய் என பல வடிவங்களில், பல வண்ணங்களில் பாய் தயாரிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பாய் தயாரிக்கும் தொழில் சிறு, குறு தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. அதிலும், கோரைப்பாய் தயாரிப்பு வேலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தலைமுறை, தலைமுறையாக தொடர்கிறது. வேலூர் அடுத்த அகரம்சேரி, கொல்லமங்கலம், ஆலந்தூர், வெட்டுவானம், பள்ளிகொண்டா போன்ற பகுதிகளில் கோரைப்பாய் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் பாய் தயாரிப்பு தற்போது இல்லை என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். பொதுமக்களிடையே கோரைப்பாய் பெரும் வரவேற்பு பெற்றாலும் ஆட்கள் பற்றாக்குறையாலும், பச்சை கோரைப்புல் விலை ஏற்றத்தால் எதிர்பார்த்த பாய்களை தயாரிக்க முடியவில்லை என பாய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற தொழிலாக கருதப்பட்ட கோரைப் பாய் தயாரிப்பு தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதால் அதை மீட்டெடுக்க தமிழக அரசு ஒரு சில சலுகைகளை எங்களுக்கு அளித்து இத்தொழிலை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அகரஞ்சேரியைச் சேர்ந்த பாய் உற்பத்தியாளர்

முருகன்

(50) என்பவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் அவர் கூறும்போது, ‘‘ஒரு கட்டு கோரைப்புல் 1,250 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். கரூர், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து கோரைப்புல் வாங்கி வந்து, அதை சுடுநீரில் வேக வைத்து சாயமிட்டு அதை வெயிலில் காய வைத்து அதன் பிறகு மின்சார இயந்திரத்தில் கோரைப்பாயாக தயாரிக்கிறோம்.

இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கோரைப்பாய் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் பேர் இத்தொழில் செய்து வந்தனர். போதிய வருவாய் இல்லாததால் 50 சதவீதம் பேர் மாற்றுத்தொழில் தேடிச் சென்றுவிட்டனர். தலைமுறை, தலைமுறையாக கோரைப்பாய் தயாரிப்பவர்கள் மட்டும் இத்தொழிலை விடமுடியாமல் செய்து வருகிறோம்.

காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை பாய் தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளிக்கு ரூ.350 கூலியாக கிடைக்கிறது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அதற்கு மேல் சம்பளம் கொடுக்க பாய் உற்பத்தியாளர்களால் முடியவில்லை. மின் கட்டணம், போக்குவரத்து செலவு, நூல் விலை ஏற்றம், சாயம் விலை உயர்வு போன்ற பல காரணங்களால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகமாக வழங்க முடிய வில்லை.

பாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

தமிழகத்தில் வந்தவாசி, லப்பை கண்டிகை, காஞ்சிபுரம் போன்ற பகுதி களில் கோரைப்பாய் தயாரிக்கும் சிறு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப் படுகிறது. இந்தப்பகுதி பாய் தயாரிப்பாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில்லை.

எங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண் டும் என தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. வங்கி மூலம் கடன் பெற்று, பாய் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை வாங்கியுள்ளோம். மாதம் தோறும் தவணை கட்ட வேண்டும். மழைக்காலம் வந்துவிட்டால் பாய் தயாரிக்கும் பணி அடியோடு பாதிக்கப்படுகிறது. சம்பளம் குறைவு என்பதால் ஆட்களும் வருவதில்லை.

இருக்கின்ற ஆட்களை வைத்து பாய் தயாரிக்கும் தொழிலை பல தலைமுறையாக செய்து வருகிறோம். இங்கு தயாரிக்கப்படும் கோரை பாய்களுக்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால் பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். எங்களிடம் ரூ.110 அல்லது ரூ.120-க்கு கோரை பாய்களை வாங்கிச்செல்லும் வியாபாரிகள் அதை ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்து இரட்டிப்பு லாபத்தை பார்க்கின்றனர்.

விவசாயிகள் எப்படி தங்கள் விளை பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியவில்லையோ, அது போல தான் நாங்களும் எங்கள் உற்பத்திக்கான விலையை நிர்ணயிக்க முடிய வில்லை. இதன் காரணமாக கோரைப்பாய் தொழில் படிப் படியாக அழிந்து வருகிறது.

ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள கோரைப்பாய்.

எனவே, இத்தொழி லையும், கோரைப்பாய் தயாரிப்பில் ஈடுப்பட்டு வரும் ஆயிரக் கணக்கான குடும்பங்களையும் மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். நலவாரியம் அமைத்து அதன் மூலம் எங்களுக்கு மானியத்துடன் கடனுதவி, நலத்திட்ட உதவிகள், கோரைப்பாய்களை அரசே கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வது, எங்கள் குழந்தைகள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகையில் முன்னுரிமை போன்ற வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

பாயில் படுத்து உறங்குவது என்பது ஏறத்தாழ யோகாசனம் செய்வது போன்று தான். தரையில் பாய் விரித்து படுத்து உறங்குவதால் நம் உடலில் புவி ஈர்ப்பு விசை சீராக பரவி, நம் உடலில் உள்ள நாடிகளுக்கு சக்தி தருகிறது. இதனால் நம் உடல் வளர்ச்சியும் அதிகரிக்கிறது, ஞாபக சக்தியும் பெருகுகிறது.

உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை வழங்குவதால் இத்தகைய பாய் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x