Last Updated : 12 Jul, 2023 03:16 PM

 

Published : 12 Jul 2023 03:16 PM
Last Updated : 12 Jul 2023 03:16 PM

பினிதாவின் விருப்பம், விஜியின் ஏக்கம், காலநிலை கவலை... - பாம்பே சர்க்கஸ் அனுபவம் @ கோவை

பாம்பே சர்க்கஸ் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி @ கோவை

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு குகைக்குள்ள ஓர் அரக்கன் இருந்தானாம்... இந்த வகையறா ஃபேன்டஸி கதைகள் எல்லாம் என் அம்மா எனக்குச் சொல்லியதில்லை. “ஒரு ஊர்ல ஒருமுறை சர்க்கஸ் கேம்ப் போட்டிருந்தபோது..” என்று வாழ்வியல் சார்ந்துதான் என் குழந்தைப் பருவ கதைகள் விரிந்திருந்தன. அப்பா சர்க்கஸ் பேண்ட் இசைக் குழுவில் கிட்டார் இசைக் கலைஞராக இருந்ததால் அம்மா சொன்ன கதைகள் எல்லாமே சர்க்கஸ் கதைகள்தான். அதுமட்டுமல்ல "ஏய்.. என் அம்மா கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்துக்கு பிஸ்கெட் போட்டிருக்கிறார், புலியின் முதுகில் தடவிக் கொடுத்திருக்கிறார் தெரியுமா?" என்று பள்ளியில் நான் அவிழ்த்துவிட்ட புழுகுமூட்டைகள் அத்தனையும் சர்க்கஸ் கதைகள் சார்ந்தவை தான்.

வளரவளர வாழ்தலே சர்க்கஸாக மாறிப்போக அந்தக் கதைகள் எல்லாம் ஆழ்மனதுக்குள் நித்திரை அடைந்திருந்தன. மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மவுனித்துப்போய்க் கிடந்த நினைவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வந்திருந்தது அன்றைய செய்தித்தாளுடன் இணைக்கப்பட்டிருந்த ‘கோவையில் பாம்பே சர்க்கஸ்’ விளம்பரம் இடம்பெற்றிருந்த துண்டுப் பிரசுரம்.

அட! சர்க்கஸ் பார்த்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே... சரி கிளம்பிவிட வேண்டியதுதான் என மனம் முடிவு செய்தது. ஒரு ஞாயிறு விடுமுறையில் மதிய ஷோவுக்குக் கிளம்பினேன். நான் மட்டும். அரங்குக்கு வெளியே திருவிழாபோல் கூட்டம் இருந்தது. நான் அதை எதிர்பார்த்து இருக்கவில்லை. ரூ.300, ரூ.400 டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. 300 ரூபாய் டிக்கெட் ஒன்று எடுத்துக் கொண்டு அரங்குக்குள் சென்றேன்.

மதியம் 1 மணி ஷோ ஆரம்பித்திருந்தது. பார் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. அந்தரத்தில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த கலைஞர்கள் அங்கும் இங்கும் லாவகமாக தாவிக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப இசை பின்னணியில் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தோதாக இடம்பார்த்து சுற்றுமுற்றும் நோட்டம் விட்டால் 5-ல் இருந்து 10 வரையிலான குழந்தைகள் அதிகமாக இருப்பதுபோல் தெரிந்தது. பொட்டுப்பொடிசுகள் பல சேரில் ஏறி நின்று கைதட்டிக் கொண்டிருந்தன. பார் விளையாட்டுக் கலைஞர்கள் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு தாவிச் செல்வதைப் பார்க்கும் போது கொஞ்சம் பதற்றமாகவும் இருந்தது எங்கே விழுந்துவிடுவார்களோ என்று. ஆனால் கீழே வலை கட்டியிருக்கிறார்கள் விழுந்தாலும் அடிபடாத வண்ணம்.

அடுத்தடுத்து நிறைய சாகசங்கள் அணிவகுத்தன. ஒற்றைச் சக்கரம் மட்டுமே கொண்ட உயரமான சைக்கிளை ஓட்டுவது, இரும்பு வளையங்களை இடுப்பில் சுற்றவிட்டபடி நடனமாடுவது, 5, 6 கால் பந்துகளை அநாயகசமாக சுற்றவிட்டு ஜக்ளிங் செய்வது, இரும்புக் குண்டுகளை வாயால் தூக்குவது என பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சர்க்கஸ் மங்கைகள் உடலை அவ்வளவு ஃபிட்டாக தயார்படுத்தி வைத்திருக்கின்றனர். இல்லாவிட்டால் நிச்சயமாக வில் போல் வளைய முடியாது. எதியோப்பியாவில் இருந்து வந்திருந்த சகோதரிகள் நிறைய சாகசங்கள் மூலம் கவனம் ஈர்த்தனர். இடையிடையே கோமாளிகள் வந்து சென்றனர். ஒரு நாற்காலியை வைத்துக் கொண்டு 4 கோமாளிகள் செய்த சேஷ்டைகள் வாழ்க்கைத் தத்துவம் போல் இருந்தது.

2 மணி நேர ஷோ இறுதியாக இரும்புக் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் சாகசத்துடன் முடிந்தது. 30 வருடங்களுக்கு முன்னர் பார்த்தபோது இருந்த சாகசங்களில் பெரிதாக மாற்றமில்லை என்றெனக்குத் தோன்றியது. அருகில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன். சர்க்கஸ் எப்படி சார் இருந்தது.. "அம்மா எனக்கு 65 வயதாகிறது. என் சிறு வயதில் இப்போ இருப்பதுபோல் டிவி மீடியாலாம் இல்லை. அப்போ சர்க்கஸ் பார்ப்பது என்பது தனி சுகம். அப்போல்லாம் சிங்கம், புலி, யானை, காண்டாமிருகம் எல்லாம் வரும். இப்போ அதெல்லாம் கூட இல்லை. பெருசா சுவாரஸ்யமா இருக்குனு சொல்ல முடியாது. ஆனா எப்போ பார்த்தாலும் டிவியைப் பார்ப்பதற்குப் பதிலாக இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களை நேரில் பார்க்கலாம் என்று தான் பேரன், பேத்திகளைக் கூட்டி வந்தேன். லீவு நாளில் இப்படி இவுங்க சேர்ந்தாப்ல ரெண்டு மணி நேரம் தான் மொபைல் பார்க்காம இருந்திருக்காங்க. எனக்கு அதுபோதும்" என்றார்.

ஷோ முடிந்தவுடன் ஏற்கெனவே மேலாளருடன் பேசி திட்டமிட்டிருந்தபடி அவரைப் பார்க்கச் சென்றேன். அவருடனான சிறு கலந்துரையாடலில் இருந்து...

சர்க்கஸ் அன்றும் இன்றும் சவால்கள் என்ன? - "சர்க்கஸ் பார்க்க வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் கலைஞர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. பலரும் தினக்கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர். சினிமா, மால், ஆன்லைன் கேம் மையங்கள் எனக் காலம் மாறிவிட்டதால் சர்க்கஸ் பார்ப்போரின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. ஆனாலும் எங்கு சர்க்கஸ் போட்டாலும் நஷ்டம் ஏற்படாத வண்ணம் கூட்டம் வரத்தான் செய்கிறது.

அதேபோல் காலநிலை மாற்றம் எங்கள் தொழிலை வெகுவாகப் பாதித்துள்ளது. முன்பெல்லாம் இது அடைமழை காலம், இது பருவமழைக் காலம் என்று தீர்மானித்து ஷோக்களை அதற்கேற்ப திட்டமிடுவோம். இப்போதெல்லாம் மே மாதத்தில் கனமழை பெய்கிறது. பருவமழை தள்ளிப் பெய்கிறது. இதனால் எங்களால் எந்த ஊரில் எப்போது என்ன காலநிலை இருக்கும் என்று தீர்மானிக்கவே முடிவதில்லை. இயற்கை இடர்களால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

நான் அன்றாடம் அரங்குக்குள் வருவோரை கண்காணிப்பேன். சர்க்கஸை பதின்ம வயது பிள்ளைகள் விரும்பவில்லை என்பதே எனது புரிதலாக இருக்கிறது. அவர்களை மால்கள், தியேட்டர்கள், பீச் போல் சர்க்கஸ் ஈர்க்கவில்லை எனத் தோன்றியது. அவர்களையும் ஈர்க்கும் வண்ணம் மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசித்து வருகிறோம்" என்று பாம்பே சர்க்கஸ் மேலாளர் சஞ்சீவா கூறினார்.

காலநிலை மாற்றம் எல்லாம் க்ளைமேட் கான்ஃபரன்ஸுக்கான பேசு பொருள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது சர்க்கஸ் தொழில் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தாவது இயற்கையைப் பேணுவோமாக என்ற எண்ணங்களோடு நகர்ந்தேன்.

வாழ்க்கையும், வாழ்தலும் சாகசம்தான்! - அடுத்ததாக ஹால்ட் அடித்தது ஒரு சர்க்கஸ் கலைஞரின் கூடாரத்துக்குள். அதை ரவுட்டி என்று அவர்கள் கூறுகின்றனர். ஏனோ அந்த ரவுட்டிக்குள் நுழையும்போது அத்தனை ஆனந்தம். அம்மா சொல்லியிருக்கிறார்கள், அவர் எர்ணாகுளத்தில் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் இருந்தபோதுதான் நான் அவருள் கருவாகி இருப்பது உறுதியானதென்று. மசக்கை வாந்தியுடன் ரவுட்டிகுள்ளேயே கிடப்பேன் என்று கூறிய கதைகளும் நினைவுக்கு வந்தன. அதனாலோ என்னவோ அந்த ரவுட்டி எனக்கு வார்த்தைகளால் வரிந்து எழுத முடியாத இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது.

ஒரு டிவி, ஒரு டவர் பேன், கொஞ்சம் தட்டு முட்டு சாமானுடன் இருந்த ரவுட்டிக்குள் பினிதா லிப்ஸ்டிக் உதட்டுக்கு மேல் புன்னகை பளபளக்க வரவேற்றார். பினிதாவின் சொந்த மண் நேபாளம். இளமையில் வறுமை துரத்த பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு உறவினர் ஒருவர் மூலம் 14 வயதிலேயே சர்க்கஸில் வந்து சேர்ந்துள்ளார். இரும்பு வளையங்களைக் கொண்டு சாகசங்களை செய்வதில் பயிற்சி பெற்று இப்போதும் அதே வித்தையைத் தான் அரங்கேற்றி வருகிறார்.

அவரது கணவர் விஜி, கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை, சகோதரர் சர்க்கஸில் இருந்ததால் படிக்காததாலும் சர்க்கஸையே தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார். சர்க்கஸ் கூடாரத்தில் மலர்ந்துள்ளது இவர்களது காதல். கோவிட் பெருந்தொற்று காலத்தில் பினிதா நேபாளத்துக்கே சென்றுவிட அங்குவரை சென்று அவரைத் திருமணம் செய்து கூட்டி வந்துள்ளார் விஜி. ஒற்றைச் சக்கரம் கொண்ட உயரமான சைக்கிளை ஓட்டுகிறார். இன்னும் சில குழு சாகசங்களையும் செய்கிறார்.

சர்க்கஸையே முழு நேரத் தொழிலாக மேற்கொள்வது பற்றி பினிதாவும், விஜியும் மனம் திறந்து பேசினார்கள். முதலில் பினிதா தான் பேசினார். "எனக்கு படிக்க வசதி வாய்ப்பில்லாததால் தான் நான் இங்கு வந்தேன். என் வருமானம் ஊரில் என் குடும்பத்தின் பசியைப் போக்கியது. இப்போது இதுவே தொழிலாக மாறிவிட்டது. குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் உடம்பை அதே ஃபிட்நஸுக்கு கொண்டுவர கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஓராண்டு பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் இப்போதுதான் இணைந்துள்ளேன்.

ஆனால், என் மகனை படிக்க வைக்க விரும்புகிறேன். அவர் நன்றாகப் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். நான் வேலை பார்க்கும் இந்த சர்க்கஸில் மாதச் சம்பளம், பிஎஃப், இன்சூரன்ஸ் போன்ற சில வசதிகள் உள்ளன. அதனால் இன்னும் உடலில் தெம்பிருக்கும்வரை சர்கஸுக்கு மக்கள் ஆதரவு இருக்கும்வரை இதே தொழிலைத் தொடரவே விரும்புகிறேன்" என்றார்.

விஜி பேசுகையில், "அப்பா, சகோதரர் இந்தத் துறையில் இருந்ததாலேயே நான் இங்கு வந்தேன். ஒழுங்காகப் படிக்கவில்லை. படித்திருந்தால் அப்பா படிக்க வைத்திருப்பார். சர்க்கஸ் வந்தபின்னர் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டேன். இளைஞர்கள் நிறைய பேர் சர்க்கஸ் பார்க்க வருவதில்லை. குழந்தைகள், வயதானவர்கள்தான் வருகிறார்கள். நாங்கள் நீங்கள் திரையில் பார்க்கும் ஹீரோக்கள் போல் டூப் போட்டு எதுவும் செய்வதில்லை. நாங்கள் செய்யும் சாகசங்கள் எல்லாமே 'ரியல்'. நீங்கள் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் பார்க்கிறீர்கள் தானே. அதேபோல் இதையும் அங்கீகரித்து பார்க்க வாருங்கள்.

இங்கே உள்ள கலைஞர்கள் அனைவருமே எங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உங்கள் ஹீரோக்கள், ஹீரோயின்கள் போல் அத்தனை மெனக்கிடல்கள் மேற்கொள்கிறோம். அரங்குக்குள் நாங்கள் சாகசம் செய்யும்போது நீங்கள் எழுப்பும் கரகோஷம் தான் பிசிறுதட்டாமல் சாகசம் செய்யும் உற்சாகத்தைத் தரும். படத்துக்கான புரோமோஷன் போல் எங்களால் எங்களை மார்க்கெட் செய்ய இயலாது அதனால் இந்தப் பேட்டியை ஒரு வாய்ப்பாகக் கருதி எங்களை ஆதரிக்கக் கோருகிறோம்.

பினிதா மற்றும் விஜி

ஏற்கெனவே சினிமா, ஓடிடி வளர்ச்சி, யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஈர்ப்பு காரணமாக எங்களின் தொழில் நலிந்து கொண்டிருக்கிறது. எங்களில் பலரும் அடுத்த தலைமுறைக்கு இந்தத் தொழிலை சிபாரிசு செய்யவில்லை. நானும் என் மகன் படித்து வேலைக்குச் செல்வதையே விரும்புகிறேன்.

இப்போது சர்க்கஸ் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் ரிங் மாஸ்டர்களுக்கு சராசரியாக 40-ல் இருந்து 50 வயதாகிறது. அவர்களும் ஓய்வு பெற்றுவிட்டால் பயிற்சியாளர்கள் இருக்க மாட்டார்கள். அதன்பின்னர் இந்தத் தொழில் இருக்குமா என்றே தெரியவில்லை. மிருகவதை தடையால் யானை, சிங்கம், புலி போன்ற மிருகங்களை சர்க்கஸ் காட்சிகளில் இருந்து நீக்கியபின்னர் மக்கள் அபிமானமும் தேய்ந்துவிட்டது.

புதிதாக சாகசங்களை சேர்க்கலாம் என்றாலும் இங்கே இந்தத் தொழில் இருப்பவர்களே குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர். 2 மணி நேர ஷோவுக்குள் புதுமைகளைப் புகுத்த பயிற்றுநர்கள் பற்றாக்குறையும் இருக்கின்றது. புதிதாக ஒரு சாகசத்தை செய்ய நிறைய பயிற்சி தேவை. செல்லுமிடமெல்லாம் தினமும் 4 ஷோ ஓட்டினால்தான் பிழைப்பு அரங்கேறும். இதில் எந்த இடைவேளையில் நாங்கள் புதிய சாகசங்களைப் பயில்வது என்பதும் சவால்தான்.

மழை, வெள்ளம், புயல் என இயற்கையும் எங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த ஒரு தலைமுறையாவது சர்க்கஸ் பிழைத்திருக்குமா என்ற கேள்வி எனக்குள் எழாமல் இருப்பதில்லை. மாதம் ரூ.22 ஆயிரம் ஊதியம் வாங்குகிறேன். இங்கே உணவு இலவசம். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து வருகிறேன். ஒரு ஆட்டோ வாங்க வேண்டும். தொழில் மேலும் நலிவடைந்தால் கேரளா சென்று சொந்த ஊரில் ஆட்டோ ஓட்டி பிழைக்க வேண்டும் என்பதுதான் என் திட்டம்" என்றார்.

எதிர்காலக் கவலையால் சோர்ந்துபோன விஜி, பினிதாவிடம் எனக்கும் சர்க்கஸுக்குமான நெருக்கத்தைக் கூறி என் பெயர்க் காரணத்தையும் சொல்லி உற்சாகப்படுத்தி நானும் அவர்களில் ஒருவர் தான் ஏதோ ஒரு வகையில் என்ற நட்பை வெளிப்படுத்தி, குழந்தையைப் படிக்க வையுங்கள் குறைந்தபட்சம் என்னைப் போல மாதச் சம்பளம் பெறுபவராவது உயரலாம் என்ற நம்பிக்கை புகட்டி ஆரத்தழுவி சில புகைப்படங்களுடன் விடைபெற்றேன்.

வெளியில் வந்து சர்க்கஸ் கூடாரங்களையும் சுற்றியிருந்த ரவுட்டிகளையும் கொஞ்சம் லாங் ஷாட்டில் பார்த்தபோது, "மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்... நாம் கூத்தாடும் கூட்டமே" என்ற பாடல் நினைவுக்கு வர மகளுடன் பகிர சில கதைகளுடன் புறப்பட்டேன். வாழ்க்கையும், வாழ்தலும் சர்க்கஸ் போலத்தான்!

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x