Published : 28 Jun 2023 06:42 AM
Last Updated : 28 Jun 2023 06:42 AM

பிரதமர் மோடியை மகனாக கருதி 6 ஏக்கர் நிலம் வழங்கும் 100 வயது மூதாட்டி

பிரதமர் மோடிக்கு நிலத்தை தர விரும்பும் மூதாட்டி, அவரது குடும்பத்தினர்.

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தனது மகனாக கருதும் 100 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு சொந்தமான 24 பிகா (6.6 ஏக்கர்) நிலத்தை பிரதமர் பெயருக்கு மாற்றித் தரப்போவதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக நேற்று மத்தியபிரதேசம் வருகை தந்தார். தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலபதி ரயில் நிலையத்தில் இருந்து 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் ம.பி.யில் 100 வயது மூதாட்டி ஒருவர் தனது 24 பிகா நிலத்தை பிரதமர் மோடியின் பெயருக்கு மாற்றி எழுதப்போவதாக அறிவித்து மக்களின் கவனம் ஈர்த்துள்ளார்.

மங்கிபாய் தன்வார் என்ற இந்த மூதாட்டி ம.பி.யின் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மூதாட்டிக்கு 12 மகன்கள், 2 மகள்கள் என 14 பிள்ளைகள் உள்ளனர். என்றாலும் தனது பிள்ளைகளை விட பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். தனது அறையில் பிரதமர் படத்தை மாட்டி வைத்துள்ளார்.

இதுகுறித்து மூதாட்டி மங்கிபாய் தன்வார் கூறியதாவது:

கரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களை பிரதமர் மோடி காப்பாற்றினார். நாட்டு மக்களை தனது குடும்பமாகவே அவர் கருதுகிறார். அவர் எங்களையும் கவனித்துக் கொள்கிறார். அதனால் எனது பங்கான 24 பிகா நிலத்தை அவருக்கு வழங்க விரும்புகிறேன். பிரதமரை எனது மகனாகவே நான் கருதுகிறேன். தினமும் காலையில் எழுந்ததும் அவரது படத்தை பார்ப்பேன். என்னைப் போன்ற கோடிக்கணக்கான விதவைப் பெண்களுக்கு அவர் ஓய்வூதியம் கொடுக்கிறார்.

விவசாயிகளுக்கு கோதுமை, அரிசி மற்றும் உணவு கொடுக்கிறார். பயிர்கள் சேதம் அடைந்தால் உரிய நிவாரணம் கொடுக்கிறார். எங்களுக்கு நல்ல வீடு கொடுத்துள்ளார். முதியவர்கள் புனித யாத்திரை செல்ல வழிவகை செய்துள்ளார்.

இவ்வாறு மூதாட்டி மங்கிபாய் தன்வார் கூறினார்.

பிரதமரை புகழ்ந்து பாராட்டும் அதேவேளையில் பிரதமருக்கு கோரிக்கை ஒன்றையும் இந்த மூதாட்டி வைத்துள்ளார். முதியோர் ஓய்வூதியத்தை அரசு உயர்த்தித் தர வேண்டும் என அவர் விரும்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x