Published : 14 Jun 2023 07:53 AM
Last Updated : 14 Jun 2023 07:53 AM

மணமகள் ஊரில் நடைபெற இருந்த திருமணத்துக்கு 51 டிராக்டரில் ஊர்வலமாக சென்ற மணமகன்

திருமணத்துக்கு டிராக்டர் ஓட்டிச் சென்ற மணமகன் பிரகாஷ் சவுத்ரி.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம், குடமாலினி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் சவுத்ரி. இவருக்கும் அருகேயுள்ள ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மணமகளின் வீட்டில் நேற்று முன்தினம் திருமண விழா நடைபெற்றது. இதற்காக மணமகன் பிரகாஷ் சவுத்ரி, மணமகளின் கிராமத்துக்கு அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக சென்றார்.அவரே டிராக்டரை ஓட்டினார். அவரை பின்தொடர்ந்து மணமகனின் வீட்டார் 51 டிராக்டர்களில் அணிவகுத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து மணமகனின் தந்தை ஜெட்டாராம் கூறியதாவது:

நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனது தாத்தா, தந்தையின் திருமண ஊர்வலங்களில் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. எனது மகனின் திருமணத்துக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர காரில் செல்வதைவிட எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் டிராக்டரை பயன்படுத்த முடிவு செய்தோம்.

எங்களிடம் 30 டிராக்டர்கள் உள்ளன. அதோடு நண்பர்களின் டிராக்டர்களும் எங்களோடு இணைந்தன. எனது மகன் பிரகாஷ் சவுத்ரி டிராக்டரில் முன்னால் செல்ல நாங்கள் டிராக்டர்களில் பின்தொடர்ந்து சென்றோம். எங்களது வித்தியாசமான ஊர்வலத்தை பார்த்து மணமகள் குடும்பத்தினர் மட்டுமன்றி அந்த கிராம மக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். ஒரு விவசாயியின் அடையாளம் டிராக்டர். அந்த டிராக்டரில் திருமண ஊர்வலம் நடத்தியது பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x