Published : 10 Jun 2023 11:41 AM
Last Updated : 10 Jun 2023 11:41 AM

தனது உயரத்தை 7 இன்ச் அதிகரிக்க ரூ.88 லட்சம் செலவிட்ட அமெரிக்க நபர்

நியூயார்க்: அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 33 வயதான பிரையன் சான்செஸ் (Brian Sanchez) எனும் நபர், தனது உயரத்தை 7 அங்குலம் என்ற அளவில் அதிகரிக்க இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளார். இத்தனைக்கும் அவர் ஏற்கனவே ஆறடி உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான காரணத்தை பார்ப்போம்.

தனது உடலின் மேல் பகுதிக்கும், குறுகிய கால் பகுதிக்கும் இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார். அதற்காக தனது உயரத்தை அதிகரிக்கவும் அவர் விரும்பியுள்ளார். பாடி பில்டரான அவருக்கு துருக்கியில் உள்ள ‘லிவ் லைஃப் டாலர் கிளினிக்’ எனும் மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது கால் பகுதியில் இருந்த சில எலும்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, இரும்பு ராடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரது தொடை பகுதியில் இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 57.5 லட்ச ரூபாய் செலவாகி உள்ளதாக தெரிகிறது. மொத்தம் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கும் சேர்த்து அவர் ரூ.88 லட்சம் செலவழித்துள்ளார். இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உயரம் முன்பிருந்ததைவிட 3.5 அங்குலம் உயர்ந்துள்ளது.

“எனது உயரத்தை அதிகரிக்க வலிமிகுந்த பாதையை எடுத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் முழுமையாக குணமடைந்த பிறகு எனது உயரம் 6 அடி 7 அங்குலமாக உயரும் என எதிர்பார்க்கிறேன்” என பிரையன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x