Published : 09 Jun 2023 04:07 AM
Last Updated : 09 Jun 2023 04:07 AM

மதுரை சித்திரை பொருட்காட்சிக்கு 1.80 லட்சம் பேர் வருகை: ஜூன் 13-ல் நிறைவு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு சித்திரை பொருட்காட்சியை 1.80 லட்சம் பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர். ஜூன் 13-ம் தேதி பொருட்காட்சி நிறைவடைகிறது.

சித்திரைத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பொருட்காட்சி கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை,பள்ளி கல்வித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, காவல்துறை உட்பட 27 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மதுரை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களின் 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டப் பலன்களை பெறுவதற்கான வழிமுறைகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இந்த அரங்குகளில் விளக்கப் படுகிறது. தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 3.45 மணி முதல் இரவு 9.30 மணிவரை பொருட்காட்சி நடைபெறும்.

பொருட்காட்சியை இதுவரை 1.80 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட 30 ஆயிரம்அதிகமாகும். வரும் ஜூன் 13ம் தேதியுடன் பொருட்காட்சி நிறைவடைகிறது. பொருட்காட்சியை காண வரும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தால் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளில் சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x