

காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரம்யா ஹரிதாஸ்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழு பகுதியில், வட்டார பஞ்சாயத்துக் கூட்டத்தில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரம்யா ஹரிதாஸின் உதவியாளர் பாளயம் பிரதீப் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து கட்சி நிர்வாகி சஜாத் வாட்ஸ்அப் குழுவில் கேள்வி எழுப்பியதால் உட்கட்சிப் பூசல் வெடித்தது.
இந்த வாட்ஸ்அப் பதிவு விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு எம்எல்ஏ ரம்யா ஹரிதாஸுக்கும் உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் காயமடைந்த ரம்யா ஹரிதாஸ், உடனடியாகச் சிரயின்கீழு தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து எம்எல்ஏ ரம்யா ஹரிதாஸ் கூறும்போது, “வங்கித் தேர்தலில் உட்கட்சிப் பூசல் வராமல் இருக்க நான் எந்தப் பிரச்சாரத்துக்கும் செல்லவில்லை. ஆனால், சஜாத் சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை அவதூறாகப் பேசினார். இதுகுறித்து பேசித் தீர்க்கவே அவர் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்குச் சென்றேன்” என்றார்.
மேலும் அங்கு வந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சஜித் முத்தம்பலம் உட்பட சிலர் தன்னிடம் மிகவும் கோபமாக நடந்துகொண்டதுடன், ‘வந்த வழியே திரும்பிச் செல்ல முடியாது’ எனத் தன்னை மிரட்டித் தாக்குதல் நடத்தியதாக ரம்யா குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சஜாத் மறுத்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் சஜித், சஜாத் உள்ளிட்ட 7 பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதேபோல சஜாத் அளித்த புகாரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து பேச கேரள காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.