பிஹார் மாநிலத்தில் வெள்ளம்: 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிஹார் மாநிலத்தில் வெள்ளம்: 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிஹாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கங்கை மட்டுமின்றி கண்டாக், கோசி, திகா, ஹதிதா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் தலைநகர் பாட்னா உள்பட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநில பேரிடர் மேலாண்மை துறையின் தகவல்களின்படி 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள், சாலைகள், சந்தைகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் 10.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளுக்குள் 5 முதல் 6 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. தங்குமிடம், உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றைப் பெறுவதற்குப் போராடுவதால், பல குடும்பங்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. 27 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களும், 7 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்களை மீட்பதற்கு 858 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றனர்.

பாகல்பூர் மற்றும் நவுகாச்சியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாஜக தேசிய தலைவர் நிதின் நவின் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் வெள்ளம்: 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in