பெங்களூரு: அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த அதிருப்தி காரணமாக பதவியேற்ற இரண்டு நாட்களில் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் டி.கே.சிவகுமார் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் கடந்த புதன் கிழமை அம்மாநிலத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அவரது தலைமையில் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டியும் அமைச்சராக பதவியேற்றார்.
இதையடுத்து, அமைச்சர்களுக்கான இலாகாக்களை முதல்வர் டி.கே. சிவக்குமார் நேற்று அறிவித்தார். இதில், அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு நீர்பாசனத்துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வராக பதவியேற்பதற்கு முன் டி.கே.சிவகுமார் எனது வீட்டுக்கு வந்தார். பெங்களூரு மேம்பாட்டு இலாகாவை வழங்குவதாக அவர் உறுதி அளித்தார். இத்தனைக்கும் நான் அவரிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இருந்தும் அவர் எனக்கு அந்த வாக்குறுதியை அளித்தார். நானும் அதை ஏற்பதாகக் கூறினேன்.
ஆனால், தற்போது வேறு இலாகாவை அவர் ஒதுக்கியுள்ளார். எனவே, நான் அமைச்சரவையில் நீடிக்க விரும்பவில்லை. ஒருவேளை அவர் எனக்கு பெங்களூரு மேம்பாட்டு இலாகா ஒதுக்குவதாகக் கூறினாலும் இனி நான் ஏற்க மாட்டேன். நான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராகவும், காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடிப்பேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டி.கே.சிவகுமார், “ராமலிங்க ரெட்டி சக அமைச்சர். எங்கள் மூத்த தலைவர். இது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. ராமலிங்க ரெட்டி எனது சிறந்த நண்பர். அமைச்சரவையில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள். பிரச்சினையை நாங்கள் தீர்ப்போம். கிராமத்துக்குச் சென்று வேலை செய்ய முடியாது என்று அவர் கூறி இருக்கிறார். அவருக்கு வேறு இலாகா ஒதுக்க வேண்டும். அவருடன் பேசி அனைத்தையும் சரி செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.