

புதுடெல்லி: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்தச் சூழலில், கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார்.
ஆனால், அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்படவில்லை. அண்ணாமலையை சமரசம் செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசிவிட்டு, இன்று தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாக மக்களிடம் உரையாட உள்ளதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அளித்திருந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
12 மணிக்கு... அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜூன் 5-ம் தேதி (இன்று) மதியம் 12 மணிக்கு, சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் தள கணக்குகளின் லிங்குகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் தனித்து வெற்றி பெற்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கடத்தியது. குறிப்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் அதலபாதாளத்துக்குச் சென்றது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தவெகவின் அமோக வெற்றிக்கு இளைஞர்களின் பேராதரவே காரணம் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் விஜய்க்கு முன்னரே தமிழக அரசியலில் தன் பக்கம் இளைஞர்களை ஈர்த்திருந்த அண்ணாமலை அதைவைத்தே அரசியலில் அடுத்த நகர்வை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் நிமித்தமாகவே இளைஞர்கள் களமாடும் சமூக வலைதளங்களில் நேரடியாக தொடர்பு கொள்ள அவர் ஆயத்தமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.