

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பரக்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது வழிநெடுக ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொல்கத்தா: பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மேற்குவங்கத்துக்கு திரும்பி வருவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 23-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. நாளை 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் முழுவதும் 16-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரச்சாரம் செய்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டம், பரக்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டேன். எனது பிரச்சார பயணம், சாலை ஊர்வலம் ஆகியவை புதிய யாத்திரை போன்றே அமைந்தது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அப்போது 11 நாட்கள் விரதம் இருந்து தென்னிந்தியா உட்பட பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தினேன். தற்போது அதே உணர்வுடன் மேற்குவங்கத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறேன். பண்டைய காலத்தில் அங்கா (பிஹார்), பங்கா (மேற்குவங்கம்), கலிங்கா (ஒடிசா) ஆகியவை நமது நாட்டின் 3 முக்கிய பிரதேசங்களாக இருந்தன.
தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இந்த 3 மாநிலங்களும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம். பிஹார், ஒடிசாவில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இதேபோல மேற்குவங்கத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும். புதிய பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மீண்டும் மேற்குவங்கத்துக்கு திரும்பி வருவேன்.
மேற்குவங்கத்தில் 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. பாஜக ஆட்சி அமைக்கும்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும். மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் அமல் செய்யப்படும். மாநில அரசு துறைகளில் காலியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும்.
மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். குறிப்பாக வேலைவாய்ப்பை அதிகரிக்க அறிவாற்றல் சார்ந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்மூலம் மேற்குவங்க இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அரசு நிர்வாகத் திறன் மேம்படுத்தப்படும். தலைநகர் கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படும். மாநிலத்தின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
மேற்குவங்கத்தை சேர்ந்த மறைந்த மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் கனவை மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. அவரது விருப்பப்படி 370-வது சட்டப்பிரிவு (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து) நீக்கப்பட்டது. மேற்குவங்கத்தின் சட்டம், ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவியிருக்கிறது. வன்முறை இல்லாத, ஊழல் இல்லாத மேற்குவங்கத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டனர். இந்த வாக்குறுதியை பாஜக கண்டிப்பாக நிறைவேற்றும்.
பெண்களின் கல்வி, வருவாய், சுகாதாரம், பாதுகாப்பை, கண்ணியத்தை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். குறிப்பாக மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மேற்குவங்கத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும். வன்முறை, ஊழல், ஊடுருவல், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் இருந்து முழுமையாக விடுபட பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.