

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மக்கள் ஆட்சிமுறை தடையின்றி இயங்குவதற்கு அடிப்படையாக அமைவது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது, 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் நாள் இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்நாளே தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றி, வளர்த்து, கோடிக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையைப் பாதுகாத்து, மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறது, ‘மக்களாட்சியின் காவல் அரண் - தேசத்தின் குரலைத் தீர்மானிக்கும் தன்னாட்சி சக்தி’ என்று போற்றப்படும் இந்திய தேர்தல் ஆணையம்.
நாடாளுமன்றம் முதல் மாநிலச் சட்டமன்றங்கள் வரை அனைத்துத் தேர்தல்களையும் எவ்வித சார்பின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் முதன்மைப் பணியாகும்.
தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி XV மற்றும் சரத்து 324-இன் கீழ் இது அமைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அமைப்பு ஆளும் அரசின் தலையீடு இல்லாமல் முற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இடம் பெற்றிருந்தார். அதன்பின் கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.
1989-ல் முதல் மாற்றம் (ராஜீவ் காந்தி ஆட்சி):
1988-இல் 61-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டு, 1989-இல் அமலுக்கு வந்தது. இதனால் கோடிக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்ந்ததால் தேர்தல் ஆணையத்தின் பணிச்சுமை பலமடங்கு அதிகரித்தது.
எனவே, 1989 அக்டோபர் 16-ஆம் தேதி ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், தலைமைத் தேர்தல் ஆணையருடன் கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1990-இல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வி.பி.சிங் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், அந்த 2 கூடுதல் ஆணையர் பதவிகளையும் ரத்து செய்து மீண்டும் ஒரு நபராகவே மாற்றியது.
1993-ல் நிரந்தர மாற்றம்:
1993-ஆம் ஆண்டில் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, அவசரச் சட்டம் மூலம் தேர்தல் ஆணையம் நிரந்தரமாக 3 உறுப்பினர்கள் கொண்ட பல-உறுப்பினர் அமைப்பாக மாற்றப்பட்டது.
அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தேர்தல் சீர்திருத்தங்களை மிகக் கடுமையாக அமல்படுத்தியதால் அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல்கள் எழுந்தன.
தனிநபரின் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்திருப்பதைத் தவிர்த்து, அதிகாரத்தைப் பரவலாக்கவும், தன்னிச்சையான முடிவுகளைத் தடுக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற 2 தேர்தல் ஆணையர்கள் ஆகிய மூவருக்கும் சமமான அதிகாரமும், ஊதியமும் வழங்கப்பட்டன. கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் நடைமுறை அமலுக்கு வந்தது.
டி.என் சேஷன் இதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில், 1995-இல் உச்ச நீதிமன்றம் 3 உறுப்பினர்கள் அமைப்பை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
காங்கிரஸின் சொந்த நலனா?
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 53 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய எஸ்.கே. மெண்டிராட்டா அளித்த பேட்டி ஒன்றில், “பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.வி.எஸ்.பெரி சாஸ்திரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் பின்னணியிலேயே தேர்தல் ஆணையம் விரிவுபடுத்தப்பட்டது.
ராஜீவ் காந்திக்கும், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கியானி ஜெயில் சிங்குக்கும் சுமுகமான உறவு இல்லை. ஆனால், குடியரசுத் தலைவராக 2-வது முறையாக போட்டியிட ஜெயில் சிங் விரும்பினார். ஆனால், இவர் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் வேட்புமனுத் தாக்கல் செயல்முறையைத் திருத்த மத்திய அரசு விரும்பியது.
ஆனால், பெரி சாஸ்திரி அதற்கு உடன்பட மறுத்துவிட்டார். இது ராஜீவ் காந்திக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உரசலை ஏற்படுத்தியது. இப்போதே இவ்வளவு கடுமையாக நடந்தால், அடுத்த 2 ஆண்டுகள் கழித்து மக்களவைத் தேர்தல் வந்தபோது, தேர்தல் ஆணையர் எவ்வாறு செயல்படுவார் என்பது காங்கிரஸ் அரசு உறுதியற்ற நிலையில் இருந்தது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தைப் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்றி தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகாரங்களைக் குறைக்க முடிவு செய்தது” என்று அவர் தெரிவித்தார்.
1989-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பானை வெளியிடப்பட்டு தேர்தல் ஆணையர்களாக எஸ்எஸ் தனோ, விஎஸ் சீகல் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் பிற பணிகள்:
தேர்தல் நடத்துவதைத் தாண்டி, ஜனநாயகத்தைக் காக்க பல முக்கியப் பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்கிறது. அதன்படி, தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதிய கட்சிகளைப் பதிவு செய்வது, கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்களை ஒதுக்குவது மற்றும் தகராறுகளைத் தீர்த்து வைப்பது, தகுதியான வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் வாக்காளர் பட்டியலைச் சீரான இடைவெளியில் புதுப்பிப்பது முக்கியப் பணிகளாகும்.
மேலும், தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகளை (MCC) அமல்படுத்தி கண்காணிப்பது, நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் தகுதியிழப்பு விவகாரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பைத் தணிக்கை செய்வது உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் செய்கிறது.
தேர்தல் ஆணையர்கள் நியமன முறையும், அதிகாரங்களும்:
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த 2023 புதிய சட்டத்தின்படி, பிரதமர் (தலைவர்), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஓர் அமைச்சரவை அமைச்சர் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். இந்தக் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டது சர்ச்சையானது.
தேர்தல் ஆணையர் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை ஆகும். உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதே கடுமையான நடைமுறையின் மூலம்தான் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.
தேர்தல் காலத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் காவல் துறை, அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார்கள். தேவைப்பட்டால் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரமும் ஆணையத்துக்கு முழுமையாக உண்டு.