

“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பார்கள். ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் பெண்கள் மீது சொல்ல முடியா கொடுமைகளும், நவீன காலத்துக்கு ஒவ்வாத கடுமையான கட்டுப்பாடுகளையும் 5 ஆண்டுகளாக திணித்து வருகிறார்கள்.
விமானம் இயக்குவதில் இருந்து, விண்வெளிக்கு செல்வது வரை பெண்கள் முன்னேறிவிட்ட நிலையில், இன்னும் இந்த வறண்ட தேசத்தில் பெண்களுக்கான சுதந்திரமும், உரிமைகளும் துளிர்க்காமலேயே சிறை வைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள் சுதந்திரத்தை இழந்து, உரிமைகளை மறந்து வாழ்ந்து வருகிறார்கள்.
கல்வி மறுப்பு, வேலைவாய்ப்பு மறுப்பு, பல்கலைக்கழகங்களில் படிக்க மறுப்பு, பொது இடங்களுக்கு செல்ல மறுப்பு, சத்தம் போட்டு பேசக்கூட உரிமை பறிப்பு, அழகு நிலையங்கள், விளையாட்டில் பங்கேற்கவும் தடை என பெண்கள் அடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள்.
தலிபான்களின் இத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு பெண்களில் ஒரு தரப்பினர் தொழில்முனைவோராக உருவெடுத்ததையும், சிறுதொழில்கள் செய்து பொருளாதார தன்னிறைவு அடைந்தததையும் கண்டு தலிபான்கள் அரசு வாயடைத்து போயுள்ளது.
இது பெண்களின் தன்னம்பிக்கைக்கும், மன உறுதிக்கும், வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்துக்கும் கிடைத்த பரிசுதான். ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக துளிர்க்காமல் இருந்த பெண் உரிமை, சுதந்திரம், வேலியை உடைத்துக்கொண்டு புறப்பட்டிருக்கிறது.
5 ஆண்டுகளில் படுமோசம்
உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கணிப்பின்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பெண்கள், வேலைவாய்ப்பில் பங்கேற்கும் வாய்ப்பு பெருமளவு குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் வேலைவாய்ப்பில் பெண் தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் பங்கு 15 சதவீதமாக இருந்தது. இது தலிபான்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டிலேயே 5.2 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2025 வரை இந்த சதவீதத்தை உயர்த்தாமல் 5.1% சதவீதமாகவே தலிபான்கள் வைத்துள்ளனர். ஆனால், ஆண் ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்களிப்பு என்பது 70 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.
துடைத்தெறியப்பட்ட பெண் கல்வி
ஆப்கானிஸ்தானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் ஆணையத்தின்படி, “2019-ம்ஆண்டு ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் 54 ஆயிரத்து 861 மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் 2023-24-ம் ஆண்டில் இது 102 ஆகக் குறைக்கப்பட்டது. 2024-25-ம் ஆண்டில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் மாணவிகள் யாரும் சேரவில்லை.
2019-ம் ஆண்டில் மட்டும் 16,496 மாணவிகள் புதிதாகச் சேர்ந்த நிலையில், 2023-24-ல் ஒரு மாணவிகூட சேரவில்லை. கல்வி அமைப்பில் இருந்தே பெண்கள் பட்டப்படிப்பு, பட்டம் பெறுவது என்பது துடைத்தெறியப்பட்டது. 2019-ம் ஆண்டில் 9,937 மாணவிகள் பட்டம் பெற்ற நிலையில், 2023-24-ல் 67 மாணவிகள் பட்டம் பெற்றனர். 2024-25-ல் ஒரு மாணவிகூட பட்டம் பெறவில்லை.
மாணவிகள் எண்ணிக்கை குறைந்தது போன்று, மாணவர்கள் எண்ணிக்கையும் 2024, 2025-ம் ஆண்டில் சரியத் தொடங்கியது. யுனிசெஃப் மற்றும் யுனெஸ்கோ கூற்றுப்படி, ‘கடினமான கட்டுப்பாடுகள் விதிமுறைகள், நீண்டகால முதலீட்டுக் குறைபாடு, மனிதநேய சிக்கல்கள், நெருக்கடிகள், பலவீனமான உள்கட்டமைப்பு, பரவலான வறுமை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவை ஆக்பானிஸ்தானின் கல்வி அமைப்பை சிதைத்துவிட்டது’ என்று தெரிய வருகிறது.
மாற்றுப்பாதையை எடுத்த பெண்கள்
இந்த விவரங்கள் அனைத்தும் தலிபான்களின் கொடுமையான கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் மேல்நிலை, கல்லூரிக் கல்வி, உயர் கல்வி மறுப்பு, பெண்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றத் தடை, பொறியாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகளாகவும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது.
தலிபான்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின் வேலையில் இருந்த பெண்களில் 80% தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். பெண்களுக்கு கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் சுருங்கியது. இதனால், பல பெண்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளுக்காகவும், பொருளாதார தன்னிறைவுக்காகவும் சொந்தமாகத் தொழில் செய்யும் முடிவை எடுத்தனர்.
ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கான வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு புள்ளிவிவரங்கள்படி, ‘தொடக்கத்தில் பெண்கள் நடத்தும் சிறு, குறு நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் 2,421 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தலிபான்களின் கட்டுப்பாடுகளால், இது 9,162 ஆக உயர்ந்தது. பதிவு செய்யப்படாத பெண்கள் நடத்தும் தொழில்கள் 52 ஆயிரத்தில் இருந்து தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பெண் தொழில்முனைவோர் எழுச்சி
உற்பத்தித் துறையில் 43 சதவீதம், சேவைத் துறையில் 30 சதவீதம், வர்த்தகத்தில் 19 சதவீதம் அளவுக்கு பெண் தொழில்முனைவோர் பங்கு உயர்ந்தது, இது தவிர தையற்கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, கார்ப்பெட் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றிலும் பெண்கள் வேகமாக முன்னேறினர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியையும், தலிபான் ஆட்சியாளர்களையும் சர்வதேச சமூக புறக்கணித்து வரும் நிலையில், பல்வேறு பொருளாதாரச் சவால்களை அந்த நாடு சந்தித்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் தலைமையிலான வர்த்தகம், தொழில் முறைக்கு ஆதரவளித்து, பொருளாதாரத் தன்னிறைவை நோக்கிய நகர்வுக்கும் தற்போது தலிபான்கள் முன்வந்துள்ளனர்.
சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஆப்கன் வர்த்தக அமைச்சர் ஹாஜி நூருதீன் அஜிசி அளித்த பேட்டியில் “நாங்கள் எப்போதும் பெண் முதலீட்டாளர்களை வரவேற்கிறோம். எங்களுக்கு தன்னிறைவை ஏற்படுத்த உதவும் எந்தப் பொருட்கள் தயாரிப்பு, உற்பத்தியையும் நாங்கள் ஆதரவளிப்போம்” எனத் தெரிவித்தார்.
ஐ.நா அமைப்பு பிரமிப்பு
ஐ.நா.வின் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் செய்த ஆய்வில் ‘தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் தங்களுக்கு பொருளாதார தன்னிறைவு அடையும் நோக்கில் தொழில்முனைவோராக உருவாவது அதிகரித்துள்ளது. 18 மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும், பெண்கள் பணியாற்றும் நிறுவனங்கள் எண்ணிக்கை 3,122 நிறுவனங்கள் செயல்படுகின்றன’ எனத் தெரிய வந்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் மோசமான கட்டுப்பாடுகள், கல்வியுரிமை மறுப்பு, பேச்சு சுதந்திரம் பறிப்பு, சுதந்திரமாக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பெண்களின் சுய எழுச்சி, தன்னம்பிக்கை பிரமிப்பாக இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஆய்வில் ‘பெண்கள் நடத்தும் நிறுவனங்களில் 28 சதவீத நிறுவனங்கள் மட்டுமே முறையாக பதிவு செய்து, சான்று பெறப்பட்டுள்ளது. 64 சதவீத நிறுவனங்கள் பதிவு செய்யப்படாமல், சான்று பெறப்படாமல் இயங்கி வருகின்றன. 7 சதவீத நிறுவனங்களுக்கு பதிவு செய்யப்பட்ட விவரம் உறுதியாகவில்லை. 2 சதவீத நிறுவனங்கள் தங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு சந்தைகள், வங்கித் துறை ஆகியவற்றில் நுழைந்து வளர்ச்சி பெற குறைந்த அளவே வாய்ப்புகள் கிடைக்கின்றன. 41 சதவீத பெண் தொழில்முனைவோர் இன்னும் கடனில்தான் தொழில் செய்கிறார்கள். 5 சதவீத பெண் தொழில்முனைவோர் மட்டுமே வங்கிகளில் கடன் பெற்று தொழில், வியாபாரம் செய்து வருகிறார்கள்.
வங்கிகளில் இருந்து பாதுகாப்பான கடன் பெறுவதற்கு, பெண்களுக்கு குடும்ப ரீதியான ஆதரவும், குடும்பத்தினர் வர்த்தக பின்புலம் கொண்டவர்களாக இருப்பது அவசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில், ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழில் துறையிடம் இருந்து சிபாரிசு கடிதம், சொத்துகள் பிணையம் ஆகியவை வங்கிகளில் கேட்பதால் பெண்களுக்கு கடன் எளிதாகக் கிடைப்பதில்லை. இதனால் சுயதொழில் செய்யும் பெண்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை குடும்பத்தினர், குடும்ப உறவுகள், நண்பர்கள், தனிப்பட்ட சேமிப்பு ஆகியவற்றின் மூலமே பெற்று தொழில் செய்கிறார்கள்’ என்பது தெரியவந்துள்ளது.
சந்தைப் பகுதிகளுக்கு தங்களின் உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்ல, பாலினப் பாகுபாடு பெரிய தடையாக இருப்பதாக மூன்றில் இரண்டு பங்கு பெண் தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர். பெண்கள் தனியாகச் செல்வதற்கு கட்டுப்பாடு, அவ்வாறு செல்ல வேண்டுமென்றால், ஆண் பாதுகாவலர் உதவி, இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பெண்களுக்கான கதவை அடைத்துவிட்டன. உலகளவில் பெண்கள் பங்கு தொழில் துறையில குறைவாக இருக்கும் தேசமாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. இருப்பினும், நம்பிக்கையைத் தளரவிடாமல், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள், பொருளாதார தன்னிறைவை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.