

கொல்கத்தா: ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு தேவையான நிலத்தை எல்லை பாதுகாப்பு படைக்கு (பிஎஸ்எப்) வழங்க முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல் அளித்தார்.
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக பாஜக.,வின் சுவேந்து அதிகாரி கடந்த 9-ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து முதல் அமைச்சரவை கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் அவருடன் பதவியேற்றுக்கொண்ட 5 அமைச்சர்களும் கலந்து கொண்டனர். வங்கதேச ஊடுருவல் பிரச்சினையை மையமாக வைத்து தான் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதனால் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஊடுருவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு தேவையான நிலத்தை எல்லை பாதுகாப்பு படைக்கு 45 நாட்களுக்குள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணியை உடனடியாக தொடங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பின் முதல்வர் சுவேந்து அதிகாரி அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லைப்புற மாவட்டங்களில் ஊடுருவல் அதிகரிக்கிறது.
இதனால் எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலத்தை 45 நாட்களுக்குள் எல்லை பாதுகாப்புப் படையிடம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. திரிணமூல் காங்கிரஸ் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டு வயது வரம்பு தளர்வு அளிப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கும் தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.