

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: வாக்குரிமையைப் பறிக்க பாஜகவை அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தாவின் ‘ரெட் ரோடு’ பகுதியில் நேற்று ரம்ஜான் தொழுகைக்குப் பிறகு, அங்கு கூடியிருந்த மக்களிடையே மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணி மூலம் வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இது, தேர்தல் நடைமுறையில் செல்வாக்கு செலுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
எஸ்ஐஆர் மூலம் பாஜக உங்கள் வாக்குரிமையை பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயகத்தையும் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாக்க நாங்கள் இறுதிவரை போராடுவோம்.
மேற்கு வங்கம் ஒற்றுமையை நம்புகிறது. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் இணைந்து வாழ்கின்றனர். இந்த சமூக நல்லிணக்கக் கட்டமைப்பை சிதைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு மம்தா பேசினார். மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட மே.வங்க பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.