

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள டியாகோ கார்சியோ தீவில் அமைந்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவ முகாமின் சாட்டிலைட் படம்
டெஹ்ரான்: ஈரானில் இருந்து 4,000 கி.மீ தொலைவில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ராணுவ முகாம் மீது ஏவுகணை வீசி உலக நாடுகளை மிரளவைத்துள்ளது ஈரான்.
ஈரான் தன்னிடம் 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன என்றுதான் இதுவரை உலகுக்கு அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிலிருந்து 4,000 கி.மீ. தொலைவில், இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் டியாகோ கார்சியோ தீவு மீது ஏவுகணைகளை வீசி உலக நாடுகளை மிரட்டியுள்ளது. இந்த தீவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவ முகாம் உள்ளது. இங்குதான் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தீவை நோக்கி ஈரான் 2 நடுத்தர ரக ஏவுகணைகளை வீசியுள்ளது. இதில் ஒரு ஏவுகணை தோல்வியடைந்து விட்டது. ஒரு ஏவுகணையை அமெரிக்கா எம்எம்-3 ஏவுகணை மூலம் இடைமறித்து அழித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஈரான் போர் இந்தியப் பெருங்கடல் பகுதி வரை விரிவடைந்துள்ளது.
ஈரானின் இந்த தொலைதூர தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வான் பாதுகாப்பு கருவிகளை பல இடங்களில் அமைக்க வேண்டிய நெருக்கடி நிலைக்கும் இந்த நாடுகள் ஆளாகியுள்ளன.