

மம்தா பானர்ஜி |கோப்புப் படம்
கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் இருதரப்பினரும் பரஸ்பரம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மேற்குவங்கத்தின் தேப்ரா நகரில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: அரசியல், கலாச்சாரரீதியாக மேற்குவங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி செய்கிறது.
இந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதன்பிறகு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து டெல்லியிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டன. எங்களது சட்டப் போராட்டத்தால் நீக்கப்பட்டோரில் 50 சதவீதம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளோம். திரிணமூல் காங்கிரஸில் பழங்குடி, இந்து, முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர். அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுகிறோம். ஆனால் பாஜக பிரிவினையை தூண்டி வருகிறது.
மேற்குவங்கத்துக்கு வெளியே வங்க மொழியை பேசுவோர் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாஜக தலைவர்கள் மதத்தை வைத்து வியாபாரம் நடத்துகின்றனர். நாங்கள் மனித நேயத்தை முன்னிறுத்தி சேவையாற்றுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.