

பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் 57-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். 3,000-க்கும் மேற்பட்டோருக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும், 587 பேருக்கு பிஎச்டி பட்டங்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைத்து துறைகளிலும் சுயசார்பை எட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட இளம் தலைமுறையினர் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
இளைஞர்களின் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. விண்வெளி துறை தனியாருக்கு திறந்துவிடப்பட்டு இருக்கிறது. இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ராக்கெட் அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செமி கண்டக்டர், ட்ரோன் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சென்டர், எரிசக்தி, குவான்டம் கம்ப்யூட்டிங், மருத்துவம், விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இளம் தலைமுறையினரால் நமது நாட்டில் ஸ்டார்ட்அப் புரட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்திய இளைஞர்கள் புதிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்காக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில் ஆராய்ச்சி துறைக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தனிப்பட்ட கடமைகள் உள்ளன. நமது முன்னோர்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டார்கள். இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிக முக்கியமான கடமை இருக்கிறது.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டியது உங்களின் கடமை ஆகும். நீங்கள் 30 வயதை எட்டும்போது வாழ்வின் முக்கியமான கட்டத்தில் இருப்பீர்கள். அப்போது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.