

பூங்கா நகர் என்ற பெருமைகொண்ட பெங்களூருவாசிகளுக்கு லால் பாக், கப்பன் பூங்காக்கள் வெறுமனே கூடிக் கலையும் பொழுதுபோக்கு இடமல்ல. அவர்களிடம் கேட்டால், ’அவை எங்களின் அடையாளம்; எங்களுடன் கலந்த உணர்வு’ என்பார்கள்.
அவ்வாறாக வரலாற்றுச் சிறப்புமிக்கது மட்டுமல்லாது பெங்களூருவாசிகளுடன் உணர்வுப்பூர்வ பிணைப்பையும் கொண்ட லால் பாக் பூங்காவில் ஆக.30 அன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ‘லால்பாக்-ல் நடப்போம்; லால்பாக்-காக நடப்போம்’ (Walk in Lalbagh. Walk for Lalbagh) என்று முழங்கினர். அந்த முழக்கத்தில் அத்தனை ஆழமான உணர்வுகள் மிகுந்திருந்தன. அவர்கள் ஏன் அவ்வாறாக கோஷம் எழுப்பினர். எதற்காகப் போராடினர் என்பதைப் பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
கர்நாடகா அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026-ஐ எதிர்த்தே பெங்களூருவாசிகள் லால் பாக் பூங்காவில் மக்கள் திரண்டிருந்தனர்.
காரணம், கர்நடாக அரசின் இந்தச் சட்டமானது, லால் பாக் மற்றும் கப்பன் பூங்காவின் குறிப்பிட்ட பரப்பிலான நிலத்தை பொது கட்டமைப்புக்காக அரசு பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது.
பெங்களூருவில் 1,353 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் லால் பாக் பூங்கா 240 ஏக்கரில் அமைந்துள்ளது, கப்பன் பூங்கா 197 ஏக்கர் அளவில் அமைந்துள்ளது.
இந்த நிலையில்தான், கர்நாடகா அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026-ஐ அம்மாநில அரசு அண்மையில் நிறைவேற்றியது. இதன்மூலம், பூங்காவின் 5% பகுதியை அரசு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ, பரிசாக வழங்கவோ, அடமானம் வைக்கவோ இயலும். லால் பாக் பூங்காவின் 12 ஏக்கர், கப்பன் பூங்காவின் 15 ஏக்கர் இதனால் பறிபோகும்.
இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அரசுத் தரப்பிலோ, இந்தச் சட்டம் அரசுத் துறைகள், சட்டப்பூர்வ அமைப்புகள், அரசு நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் பொதுப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது பூங்காவுக்குள்ளேயே சாலைப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளம் ரியல் எஸ்டேட் பணிகளையே ஊக்குவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
16 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கச் சாலை:
பெங்களூரு மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, ஹெப்பால் ஜங்ஷனில் இருந்து, சென்ட்ரல் சில்க் போர்டு வரை, 16 கி.மீ தொலைவுக்கு, சுரங்கச் சாலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல்வர் சிவகுமார் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
இந்த சுரங்கச் சாலை, லால்பாக் பூங்காவின் கீழ் 100 அடி ஆழத்தில் எக்ஸ்பிரஸ் ஹைவே போல அமையும். பூங்காவில் உள்ள பாறையை குடைந்து, பணிகள் நடத்தப்படும்.
இதற்காகத்தான் பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026-ஐ கொண்டுவந்துள்ளது என்பதே லால்பாக் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சங்கம், பொது மக்கள், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
பாஜக கடும் கண்டனம்:
பொதுமக்கள் கண்டனம் ஒருபுறம் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.
“கர்நாடக அரசின் இந்தப் புதியச் சட்டமே, பூங்காக்களை முழு வீச்சில் வணிகமயமாக்குதலின் நோக்கம் கொண்டது. பெங்களூருவின் அடையாளமான லால் பாக் தாவரவியல் பூங்காவின் வழியாக சர்ச்சைக்குரிய சுரங்கச் சாலையை மேற்கொள்வதே மறைமுக இலக்கும். இந்தத் திட்டத்தை அதானி குழுமம் மேற்கொள்ளவிருக்கிறது,” என்று பாஜக விமர்சிக்கிறது.
பெங்களூரு ஏற்கெனவே மூச்சுமுட்டிக் கொண்டிருக்கிறது. நிழல் தரும் மரங்களை இழந்து, பசுமை குறைந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பசுமையை பாதுகாக்கும் திட்டங்களைத்தான் விஸ்தரிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள பூங்காக்களை பாதுகாக்க வேண்டும். ஆனால், இவற்றை நிதி ஆதாரம் போல் அல்லவா இந்த அரசாங்கம் பார்க்கிறது” என்று கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பாஜக எம்எல்ஏ ஆர்.அசோகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் லால் பாக் பூங்கா வழியாகச் செல்லக் கூடிய சுரங்க சாலை திட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகா அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026-க்கான ஒப்புதலை மறுத்து, சட்டப்பேரவையின் மறு பரிசீலனைக்கு அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, ஹெப்பால் ஏரி வழியாகச் செல்லும், ஹெப்பால் சுரங்கத் திட்டத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஹெப்பால் ஏரி பெங்களூரு நகரின் மிக முக்கியமான நிலத்தடி நீர்ப்படுகை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நிலையில் லால் பாக் போராட்டம் பற்றி தேஜஸ்வி சூர்யா, “நாங்கள் வளர்ச்சிக்கு ஆதரவானவர்கள், ஆனால் நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அழித்து வரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். லால்பாக் ஒன்றும் பீட்சா அல்ல; அதைத் துண்டு துண்டாக வெட்ட. ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து இந்தப் பூங்காக்களைப் பாதுகாப்பதும், சுரங்கப்பாதை திட்டத்தைத் திரும்பப் பெற வைப்பதுமே எங்களின் இலக்கு. லால்பாக் மற்றும் இதர பூங்காக்களைக் காப்பாற்றுவது குற்றம் என்றால், நாங்கள் இந்தக் குற்றத்தை தினமும் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்களின் கேள்வி:
“அரசு 5% நிலத்தை பொதுப் பயன்பாட்டுக்காக எடுப்பதாகச் சொல்கிறது. ஆனால், இப்படி 5% தான் எடுக்க வேண்டும் என்ற முடிவை அரசு எட்டியது எப்படி?
இந்த முடிவை எட்டும் முன்னர் பூங்காவின் தன்மை சிதையாமல் 5%-ஐ மட்டும் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது சாத்தியமா என்று தோட்டக்கலைத் துறையினர், சூழலியல் ஆர்வலர்கள், நகர வளர்ச்சி திட்டமிடுபவர்கள், அல்லது ஏதேனும் சுயாதீன நிபுணத்துவ அமைப்பு என்று யாரிடமேனும் அறிவுரை கேட்டதா?” என்று அவர்கள் வினவுகின்றனர்.
முதல்வரின் விளக்கம்:
பொது மக்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என்று எல்லா பக்கத்திலிருந்து எதிர்ப்பு கிளம்ப கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், “சுரங்கச் சாலை திட்டமானது லால்பாக் பூங்காவுக்கு அடியில் தான் செல்கிறதே தவிர லால்பாக் பூங்காவை அழித்து அல்ல. அந்தப் பூங்காவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு சிறிய பகுதி மட்டுமே சுரங்கச் சாலைத் திட்டப் பணிகளுக்கான உபகரணங்களை வைக்கப் பயன்படுத்தப்படும். அதுவும் வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே.
மேலும், லால்பாக் பூங்காவை சுற்றிய பகுதிகளில் 6 புதிய பூங்காக்களை உருவாக்கத் திட்டமுள்ளது. இவை ஒட்டுமொத்தமாக சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் அமையும்” என்று விளக்கமளித்துள்ளார்.
கர்நாடகாவில் இது புதிதல்ல..
#SteelFlyoverBeda (இரும்புப் பாலம் வேண்டாம்) என்ற ஹேஷ்டேக் 2019 வாக்கில் கர்நாடகாவில் ட்ரெண்டானது. பெங்களூருவாசிகள் அப்போது ஒன்றிணைந்து இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்தனர்.
2016-ல் காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது இத்திட்டம் முன்மொழியப்பட்டது. பின்னர் குமார்சாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இத்திட்டம் மீண்டும் உயிர் பெற்றது. பசவேஸ்ரா வட்டத்திலிருந்து (சாலுக்யா சர்க்கிள்) ஹெப்பால் வரை இந்த இரும்பு மேம்பாலம் அமைக்கப்படும் என்று பெங்களூரு வளர்ச்சிக் குழுமம் கூறியது. ஆனால் இத்திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் என்பதாலேயே மக்கள் எதிர்த்தனர்.
ரூ.1800 கோடி செலவில் அத்திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தது. அதற்காக குறைந்தது 812 முதல் அதிகபட்சமாக 2000 வளர்ந்த மரங்கள் வெட்டப்படும் சூழலும் இருந்தது. அந்தப் பாலத்தை அமைத்தால் ஹெப்பாலில் இருந்து பெங்களூரு விமான நிலையம் செல்லும் நேரம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டத்தை எதிர்த்த சூழலியல் ஆர்வலர்களோ வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே பயண நேரம் குறையும் என்று ஆதாரத்தோடு விளக்கினர்.
ஒருவழியாக அதிக செலவு, அதிக சுற்றுச்சூழல் பாதிப்பில் குறைந்த பலனைத் தரும் திட்டம் தேவையில்லை என்ற சமூக, சூழலியல் ஆர்வலர்கள், பொது மக்களின் போராட்டம் வென்றது. அரசு அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மனிதனின் சொகுசான வாழ்க்கைக்காக வளர்ச்சிப் பணிகள் தேவைதான். ஆனால் மனித சமுதாயம் வாழ, தழைக்க இயற்கையின் கொடை அவசியம். இயற்கையை சேதப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் மக்கள் போராட்டங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
மும்பை ராய்காட்டில் நகர்ப்புற விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துதலுக்கு 124 கிராமங்கள் எதிர்ப்பு, மகாராஷ்டிரா, ஆந்திராவில் ஏஐ டேட்டா சென்ட்டர்கள் அமைக்க எதிர்ப்பு, மத்தியப் பிரதேசத்தில் கென் - பெட்வா நதிகள் இணைப்புக்கு எதிர்ப்பு எனப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எதிர்த்து சாமானியர்களும், சமூக நல ஆர்வலர்களும், சூழலியல் செயற்பாட்டாளர்களும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எல்லாப் போராட்டங்களுக்கும் #SteelFlyoverBeda போல் தீர்வு கிட்டும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களைவிட இயற்கையைப் பாதுகாப்பதில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் நேபாள சம்பவம் போல் ஏதேனும் ஒருவித இயற்கைப் பேரிடர் பாடம் சொல்ல மவுனித்துக் காத்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.