“‘ஜென் ஸி’ தலைமுறையால் அரசுக்கு சவால் விட முடியும் என்பதை டெல்லி போராட்டம் நிரூபித்துள்ளது”

உத்தவ் தாக்கரே பாராட்டு
உத்தவ் தாக்கரே | கோப்புப்படம்
உத்தவ் தாக்கரே | கோப்புப்படம்
Updated on
2 min read

மும்பை: “வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம், பாஜகவுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்தின் தொடக்கம். ‘வாக்குகளைத் திருடலாம், ஆனால் மக்களை அல்ல’ என்பதை இது நிரூபித்துள்ளது” என சிவ சேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட 21 மாணவர்களின் நினைவாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மும்பை சிவாஜி பூங்காவில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய சிவ சேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, “வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம், பாஜகவுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்தின் தொடக்கம். ‘வாக்குகளைத் திருடலாம், ஆனால் மக்களை அல்ல’ என்பதை இது நிரூபித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் ஒற்றுமையின் மூலம் இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதியுள்ளனர். மாணவர்களின் போராட்டம் ஒரு தேசிய அளவிலான இயக்கமாக மாறியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், ஏன் அதுபற்றிப் பேசுகிறோம் என்று கேட்கிறார்கள்.

அதற்கான பதில் எளிமையானது. வாக்குகளைத் திருடலாம், ஆனால் மக்களை அல்ல என்பதை மோடி இப்போது உணர்ந்துள்ளார்.

இப்போது கண்மூடித்தனமான ஆதரவாளர்களை தேசபக்தர்கள் தோற்கடித்துள்ளனர். இது ஒரு பெரிய போராட்டத்தின் தொடக்கம். இது பாஜகவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போராட்டம். பிரதமர் மோடியிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உங்கள் அமைச்சர்கள் அரசியல் கட்சிகளை உடைப்பதிலேயே மும்முரமாக உள்ளனர். அவர்களை நாட்டுக்காகப் பணியாற்றச் சொல்லுங்கள்.

பிரதமர் மோடியிடம் நான் கேட்க விரும்புகிறேன். உங்களுக்குப் பிடித்தமான தர்மேந்திர பிரதானை அமைச்சரவையிலிருந்து நீக்குவது உங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்? ஆனால், தங்கள் பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டபோது அந்த மாணவர்களின் குடும்பங்கள் அனுபவித்த வேதனையை விடவா அந்த வலி பெரிதாக இருந்திருக்கும்? அந்த வலியை என்னால் மறக்க முடியாது, ஒருபோதும் மறக்கமாட்டேன்.

இளைஞர்கள் தங்கள் போராட்ட உணர்வைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வை மங்கிப்போக விடாதீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணவத்தைப் பொறுத்துக்கொள்ளாதீர்கள். மக்களின் வலிமையை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். இனி யாரையும் இந்த நாட்டை பலவீனப்படுத்த அனுமதிக்காதீர்கள்.

நிதி அமைச்சர் ரூபாயின் மதிப்பு சரிவு, பணவீக்கம் உயர்வு குறித்துப் பேசுவதில்லை, ஆனால் வினாத்தாள் கசிவின் 'நன்மைகள்' குறித்து விளக்குகிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்திருக்க வேண்டும், ஆனால் அவர் தர்மேந்திர பிரதானை பாதுகாத்துக்கொண்டிருக்கிறார். மாணவர்களின் போராட்ட வெற்றி, 'ஜென் ஸி' தலைமுறையினரால் அரசாங்கத்திற்குச் சவால் விட முடியும் என்பதை நிரூபித்துள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே | கோப்புப்படம்
மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது ஏன்? - விளக்கம் கேட்டு அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in