

அமராவதி: ஆந்திராவில் உள்ள 13 மாநகராட்சிகள், 77 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.
இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.இதில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் நேற்று தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடந்தது.
ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்தத் தொகுதியான கடப்பா மாவட்டம் புலிவேந்துலா தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கலின்போது, தெலுங்கு தேசம் கட்சியினர் மீதும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
மேலும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிக் கட்டுப்படுத்தினர். இருப்பினும் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், 6 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் தற்காலிகமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால், கடப்பா எஸ்.பி. விஸ்வநாத் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்தபோது மீண்டும் வன்முறை வெடித்தது. இதனால் மேலும் 10 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.