குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுடெல்லி: தமிழகத்தில் கூட திருக்குறளை இவ்வளவு பரவலாகக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமா? என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
வாரணாசியில் நேற்று தொடங்கிய காசி தமிழ் சங்கமம் 5.0 தொடக்க நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அவர் தமிழில் பேசியதாவது: இந்த ஆண்டின் காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருளாக, ‘திருக்குறள் பயில்வோம்’ என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் திருக்குறளில் பொதிந்துள்ள காலத்தால் அழியாத அறநெறிகள், மனிதநேயச் சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் நெறிகளை குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டின் காசி தமிழ் சங்கமத்தின் தனிச்சிறப்பே திருக்குறளையும், திருவள்ளுவரையும் தேசிய அளவில் மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான். திருக்குறளைப் படிப்போம், பயில்வோம்.
அதன் உயரிய அறநெறிகளை நமது வாழ்க்கையில் கடைப்பிடிப்போம் என்பதே இந்தப் பதிப்பின் மையச் செய்தியாகும். திருக்குறள் என்பது தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் மட்டுமே சொந்தமான நூல் அல்ல.
அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உரிய ஓர் உயரிய வாழ்வியல் பொக்கிஷம். தமிழகத்தில் கூட திருக்குறளை இவ்வளவு பரவலாகக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமா? என்றால், அனேகமாக இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
காசி தமிழ் சங்கமத்தின் முதல் பதிப்பிலேயே திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரண்டாவது பதிப்பில் மேலும் 16 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இன்று, வெளிநாட்டு மொழிகள் உட்பட மொத்தம் 50 மொழிகளில் திருக்குறள்ம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.
தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், திருவள்ளுவரின் உலகப் பொதுமறைக்கும் இதைவிடப் பெரிய பெருமையை வேறு என்ன வழங்க முடியும்? மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் இணைந்து தமிழுக்குச் செய்துள்ள இந்த மகத்தான பணியை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
இதில் இரண்டு கர்மயோகிகளான பிரதமர் மோடியும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அளித்த பங்களிப்பு மகத்தானது. இவர்கள் இருவரும் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் ஆற்றியுள்ள பணி என்றும் போற்றத்தக்கது என்றார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, ஐஐடி மெட்ராஸ், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உத்தரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, உ.பி-யின் அமைச்சர்களான அனில் ராஜ்பர், ரவீந்திர ஜெய்ஸ்வால், சங்கர் மிஸ்ரா, ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் தீப்தி கர் முகர்ஜி, பாரதிய பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.