

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 5.0-ஐ தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் கலாச்சார, மொழி மற்றும் நாகரிகத் தொடர்புகளை கொண்டாடும் வகையில் இந்த காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி 5-வது பதிப்பாக நவ.28 முதல் டிச. 12 வரை நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா வாராணசியின் கங்கைக் கரையில் உள்ள நமோ காட்டில் இன்று நடைபெறுகிறது. இதனை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைக்கிறார்.
இவருடன் மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் தீப்தி கவுர், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பிஎச்யூ துணைவேந்தர் பேராசிரியர் அஜீத் குமார் சதுர்வேதி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்த 46,080 பேரில் சுமார் 1,400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்களாகப் பங்கேற்கின்றனர்.
8 நாள் பயணத்தில் 4 நாட்கள் பயணத்திற்கும், மீதமுள்ள 4 நாட்கள் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாராணசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களையும் பார்வையிடுகின்றனர்.
கேடிஎஸ் 5.0-ன் கருப்பொருள் ‘திருக்குறள் பயில்வோம்’ என்பதாகும். இது மாணவர்கள், இளைஞர்களிடையே திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானம் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் வளர்க்கிறது.
இந்நிகழ்வு மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையால், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உத்தர பிரதேச அரசு மற்றும் பல்வேறு மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடக வல்லுநர்கள், வேளாண்மை துறையினர், தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்கள், பெண்கள், ஆன்மிகத் தலைவர்கள் என 7 பிரிவுகள் பங்கேற்கின்றன.