

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குழிகள் மற்றும் பழுதுகளைக் கண்டறிய, சுமார் 50,000 கி.மீ. தூரத்துக்கு டேஷ்கேம் (வாகனக் கேமரா) பொருத்தி கண்காணிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.
சாலைப் பராமரிப்பில் ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் செய்யும் காலதாமதத்தையும், பொறுப்பிலிருந்து தப்பிக்க முயலும் போக்கையும் கட்டுப்படுத்தவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாரந்தோறும் நெடுஞ்சாலைகளில் சென்று, 2 அங்குலக் குழிகள், மங்கிய சாலைக் கோடுகள், பழுதான விளக்குகள், அனுமதியற்ற பாதைகள் உள்ளிட்ட பழுதுகளைப் படம் பிடிக்கின்றன. துல்லியமான இடம் மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் இந்தத் தகவல்கள் மையக் கட்டுப்பாட்டு அறையின் கணினியில் பதிவேற்றப்படுகின்றன. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களும் கள அதிகாரிகளும் அவற்றைப் பார்க்கலாம்.
விதிகளின்படி குழிகளை அடைக்க 2 நாட்களும், பழுதான விளக்குகள் மற்றும் பணிமனை பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய ஒரு நாளும், அனுமதியற்ற திறப்புகளை மூட 7 நாட்களும் கால அவகாசம் வழங்கப்படுகிறது. பழுதைச் சரிசெய்ததற்கான புகைப்பட ஆதாரத்தைப் பதிவேற்ற வேண்டும்.
தற்போது ஒப்பந்த விதிகளின்படி அபராதம் கணக்கிடப்படும் நிலையில், அடுத்த சில மாதங்களில் மனிதத் தலையீடின்றித் தானியங்கி முறையில் கணக்கிடப்படும். தரம் குறைந்த பணிக்குப் பொறுப்பானவர்கள் அபராதத்தையும், சில சமயம் கறுப்புப் பட்டியலையும் எதிர்கொள்வார்கள் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.