

புதுடெல்லி: ஆசியாவின் 3-வது பெரிய வல்லரசாக இந்தியா விளங்குவதாகவும் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களில் பிரதமர் மோடி 2-ம் இடத்தில் இருப்பதாகவும் லோவி ஆய்வறிக்கை கூறுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிந்தனை அமைப்பான லோவி இன்ஸ்டிடியூட், ‘ஆசிய அதிகார குறியீடு 2026’ என்ற பெயரில் வருடாந்திர ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை 27 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை, 131 அம்சங்கள் மூலம் மதிப்பீடு செய்கிறது. இது பொருளாதாரம் மற்றும் ராணுவத் திறன், மீள்தன்மை, தூதரகத் தாக்கம், எதிர்கால வளங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொருளாதார உறவுகள் ஆகிய எட்டு அதிகார அளவீடுகளை உள்ளடக்கியது.
இதன்படி, ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, 40.5 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஆசிய நாடு இல்லை என்றாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான ராணுவ உறவுகள் (பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை), கலாச்சாரத் தாக்கம், எதிர்கால வளங்கள் மற்றும் நிலையான வெளியுறவுக் கொள்கை வலுவான பொருளாதாரக் கணிப்பு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமை ஆகியவையே இதற்குக் காரணம் என அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அடுத்தபடியாக, ஆசியாவின் மிகவும் திறமையான பிராந்தியத் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2-ம் இடத்தில் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.