

ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தொடங்கிவைத்தார். ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2025-ம் ஆண்டு ஜூனில் தொடங்கி வைத்தார்.
அப்போது காஷ்மீரின் கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த சூழலில் ஸ்ரீநகர் செல்வதற்காக ஜம்மு வந்து சேரும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கத்ரா சென்ற பிறகே ரயில் சேவையை பயன்படுத்த முடியும் சூழல் இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் இருந்து கத்ரா வரை தண்டவாளம், சிக்னல் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஜம்முதாவி-ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தொடங்கிவைத்தார். ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: பூஞ்ச்-ரஜோரி- உரி பகுதிகளுக்கும் ரயில் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும். இதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. விரைவில் பணிகள் தொடங்கப்படும். கடும் குளிர் காலங்களிலும் காஷ்மீரில் ரயில் சேவை எவ்வித பாதிப்பும் இன்றி இயக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
சரக்கு ரயில் போக்குவரத்தால் காஷ்மீரில் சிமென்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.50 குறைந்திருக்கிறது. இங்கிருந்து 20,000 டன் ஆப்பிள்கள் ரயில் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த நதீம் அகமது லோகர் கூறும்போது, “ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி மூடப்படும்.
தற்போது வந்தே பாரத் ரயிலால் அனைத்து காலசூழ்நிலைகளிலும் எளிதாக பயணம் மேற்கொள்கிறோம். இதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோண்” என்றார். மற்றொரு பயணி அனு குப்தா கூறும்போது, “வந்தே பாரத் ரயிலில் ஜம்முதாவியில் இருந்து சுமார் 4 மணி நேரத்தில் ஸ்ரீநகரை சென்றடைந்துவிட்டோம். இதன்மூலம் நேரமும் பணமும் மிச்சமாகிறது. காஷ்மீரின் சுற்றுலா மேம்படும்” என்று தெரிவித்தார்.