

விநாயகர் சிலை, அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை
புதுடெல்லி: இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்திருக்கிறது. அவற்றின் மதிப்பு ரூ.133 கோடி ஆகும்.
இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகள், புராதன பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, பழங்கால அரிய பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அந்த நாடுகளின் அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறார். இதன்படி பல்வேறு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்த வரிசையில் இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 657 பழங்கால சிலைகள், அரிய பொருட்கள் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.133 கோடி ஆகும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 657 பழங்கால சிலைகளை இந்திய தூதரக அதிகாரி ராஜலட்சுமி கடாம் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஆல்வின் எல். பிராக் ஜூனியர் கூறும்போது, “அமெரிக்கா முழுவதும் இதுவரை 6,200-க்கும் மேற்பட்ட கலாச்சார பொக்கிஷங்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் 5,900-க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் 36 நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 657 தொல்பொருட்கள் இந்திய மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் சுபாஷ் கபூர், நான்சி வீனர் உள்ளிட்டோரால் அமெரிக்காவுக்கு பல்வேறு காலகட்டங்களில் கடத்தி வரப்பட்டவை” என்று தெரிவித்தார்.
சிலைகளின் விவரங்கள்: சிங்கங்கள் இருபுறமும் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தின் மீது இரட்டைத் தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் அவலோகிதேஸ்வரரின் வெண்கலச் சிலை இந்தியாவிடம் திருப்பி வழங்கப்பட்டு இருக்கிறது. ராய்ப்பூரில் உள்ள மஹந்த் கசிதாஸ் நினைவு அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட அவலோகிதேஸ்வரர் சிலை 1982-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது. இந்த பழங்கால சிலைகள், அரிய பொருட்கள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன.