

புதுடெல்லி: கடைகளில் விற்கப்படும் முட்டைகளில் காலாவதி தேதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் பழைய முட்டைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பது சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது.
உ.பி அரசின் புதிய உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஒவ்வொரு முட்டையிலும் துவக்கம் மற்றும் காலாவதி தேதிகளைக் கட்டாயம் முத்திரையிட வேண்டும்.
இதனால், உ.பி.யில் கடைக்காரர்கள் இனி பழைய அல்லது சேதமடைந்த முட்டைகளை ’புதியவை’ எனக் கூறி விற்க முடியாது. ஒரு முட்டை எவ்வளவு பழமையானது மற்றும் அது எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருக்கும் என்பதை வாடிக்கையாளர்களே முத்திரையிட்ட தேதிகளைப் பார்த்துத் தீர்மானிக்கலாம்.
இது, நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என உ.பி. அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உ.பி.யின் கால்நடை வளர்ப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இந்த விதி செயல்படுத்தப்படுகிறது. முட்டைகள் மனித ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பதால் இந்த முடிவு எனவும் விளக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் இதுவரை பரவலான இடங்களில் பழைய முட்டைகள் விற்கப்பட்டதாக புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. முட்டைகளின் நிலை என்ன என்பதும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது, புதிய உத்தரவை அமல்படுத்துவதன் மூலம், முட்டைகளின் நிலை மீதான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. மேலும், மக்களுக்குப் பாதுகாப்பான முட்டைகள் கிடைக்கவும் வழி பிறந்துள்ளது.
பொதுவாக, முட்டைகள் வைக்கப்பட்ட அறைகள் சுமார் 30 டிகிரி வெப்பநிலையில், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே கெடாமல் இருக்கும் எனக் கருதப்படுகிறது. குளிர்ச்சியான இடத்தில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வைத்தால், ஐந்து வாரங்கள் வரை பயன்படுத்தலாம். இந்நிலையில், உ.பி.யில் பல கடைக்காரர்களும், வணிகர்களும் முட்டைகள் கெடாமல் இருக்க குறிப்பிட்ட வெப்பநிலையை பாதுகாப்பதில்லை எனப் புகார்கள் உள்ளன.
இப்போது, புதிய சட்டப்படி இந்த முத்திரை வாடிக்கையாளர்களுக்கு பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யில் இனி எந்த ஒரு வியாபாரி அல்லது கடைக்காரர் விதிகளை மீறினால், அவர்களுடைய முட்டைகள் பறிமுதல் செய்யப்படும். பிறகு அவை அழிக்கப்படும் அல்லது மனித நுகர்வுக்குப் பாதுகாப்பற்றவை என்று தெளிவாகக் குறிக்கப்படும்.
மேலும், உ.பி. அரசு துறை சார்பில் சட்டப்படியான விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய மாநிலமான உ.பி.யின் ஆக்ரா மற்றும் ஜான்சி நகரங்களில் மட்டுமே பெரிய அளவிலான முக்கிய குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, முட்டைகளையும் காய்கறிகளையும் ஒரே குளிர்பதனக் கிடங்கில் சேமிக்க முடியாது. ஏனெனில் இரண்டுக்கும் வெவ்வேறு வெப்பநிலைத் தேவைகள் உள்ளதாக உ.பி. அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விதி விரைவில் மாநிலம் முழுவதும் கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளது. கடைக்காரர்களும் உற்பத்தியாளர்களும் இதற்காக முன்னரே தயாராகிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.