

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆரையா பகுதியைச் சேர்ந்த முதியவர் ராகேஷ் யாதவ் (65). சொந்த நிலம் இல்லாத காரணத்தால் இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவரது இரு சகோதரர்களும் இறந்து விட்டனர். இவருக்கு திருமணம் ஆகாத ஒரு சகோதரி மட்டும் உள்ளார். இவரது முன்னோர்கள் வசித்த வீட்டையும், உறவினர் ஒருவருக்கு வழங்கிவிட்டு, கூடாரத்தில் ராகேஷ்யாதவ் வசித்து வருகிறார். சொந்தம், பந்தம் இல்லாமல் சோகத்துடன் வாழ்ந்து வந்த ராகேஷ் யாதவுக்கு, தான் இறந்துவிட்டால், தனக்கு ஈமச் சடங்கு நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துவதற்கு ஒருவரும் இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது.
அதனால் தான் உயிரோடு இருக்கும் போதே, இறப்புக்கு பின் அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சியை (பந்தாரா) நடத்த விரும்பினார். இதற்காக அழைப்பிதழ் அச்சிட்டு 1,900 பேருக்கு அழைப்பு விடுத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர். ஈமக்கிரியை பூஜைக்குப் பின் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.
இது குறித்து ராகேஷ் கூறுகையில், "எனக்கு உறவினர் யாரும் இல்லை. அதனால் நான் உயிரோடு இருக்கும்போதே பந்தாரா நடத்த விரும்பினேன்" என்றார்.