

அயோத்தி: கர சேவகர்கள் மீது ஒரு காலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தற்போது ராம பக்தர்கள் பற்றி கவலைப்படுகின்றனர் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கிண்டலடித்துள்ளார்.
ராமர் கோயில் கட்ட வசூலிக்கப்பட்ட நன்கொடையில் கோடிக்கணக்கான ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
நன்கொடையில் ரூ.7.5 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பவன் பாண்டே குற்றம் சாட்டினார். இதையடுத்து ராமர் கோயில் அறக்கட்டளை விடுத்த வேண்டுகோளை ஏற்று சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது: ராமர் கோயில் விஷயத்தில் எதிர்க்கட்சியினரின் இரட்டை நிலையை பாருங்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க முயற்சித்த காங்கிரஸ், தற்போது அயோத்தி பற்றி கவலைப்படுகிறது.
பகவான் ராமர் என்பவரே இல்லை என வெட்கமே இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. தற்போது ராம பக்தர்கள் புண்படுத்தப்பட்டுள்ளனர் என கூறுகிறது.
ஜெய் ராம் கோஷமிட்ட கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு, தடியடி நடத்திய சமாஜ்வாதி கட்சி, தற்போது மற்றவர்களுக்கு போதிக்கிறது. ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக விசாரிக்க எஸ்ஐடி அமைத்துள்ளோம்.
அது அனைத்து விஷயங்களையும் தெளிவாக வெளிப்படுத்தும். ராம பக்தர்களின் உணர்வுகள் பாதிக்குமாறு யாரும் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம். நன்கொடை முறைகேடு தொடர்பாக ஆதாரம் இருந்தால், அவர்கள் அதை எஸ்ஐடியிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.