

ஹைதராபாத்: சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில், மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத் சனிக்கிழமை மாலை தெலங்கானா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தனக்கு முன்கூட்டியே ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், அவரது கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே 8-ஆம் தேதி ஹைதராபாத்தின் பேட் பஷீராபாத் காவல் நிலையத்தில் சாய் பகீரத் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருமண ஆசை காட்டி மொய்னாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்துச் சிறுமிக்குக் கட்டாய மது கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கில் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நீண்ட இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் சிறுமியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர் மைனர் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சாய் பகீரத் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் முதல்முறை குற்றவாளி அல்ல என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி டி.மாதவி தேவி இடைக்கால தடை வழங்க மறுத்து, இறுதித் தீர்ப்பை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சாய் பகீரத் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க சைபராபாத் போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். மேலும், ஹைதராபாத் மற்றும் கரீம்நகரில் உள்ள அமைச்சரின் இல்லங்களில் ஐந்து தனிப்படைகள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தச் சூழலில், சனிக்கிழமை மாலை போலீஸார் தங்களின் தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் சாய் பகீரத் இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மகன் கைது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறான், இருப்பினும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க அவனை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். கைதான சாய் பகீரத் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மேட்சல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.