

புதுடெல்லி: பாபர் மசூதி-ராமர் கோயில் விவகாரத்தில் ஏற்பட்ட மதக் கலவரங்களின் தாக்கமாக 1992-ல் தேசிய மதநல்லிணக்க அறக்கட்டளையை (என்எப்சிஎச்) மத்திய அரசு உருவாக்கியது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, இந்த அமைப்பை மூடிவிட உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கியமாக, கடந்த 10 வருடங்களில் எந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலும் நடைபெறவில்லை எனக் காரணம் கூறப்பட்டு உள்ளது.
என்எப்சிஎச் அமைப்பின் சார்பில், ஒரு முக்கியத் திட்டம் அமலில் உள்ளது. நாட்டில் வகுப்புவாத, சாதி, இன அல்லது தீவிரவாத வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் அது. இந்த நிதியுதவி திட்டத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘இந்த மூடலுக்காகக் கூடிய மத்திய அமைச்சர்கள் குழு, கடந்த வருடம் காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை ஏனோ கவனத்தில் கொள்ளவில்லை. மத்திய அரசின் இந்த முடிவுக்கு உள்துறை, நிதி உள்ளிட்ட அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்து விட்டன. மூடல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தன.
மத நல்லிணக்க விருதுகள்: என்எப்சிஎச் அமைப்பானது, 1860-ம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமாகும். இதன் நிர்வாகக் குழு தலைவராக உள்துறை அமைச்சர் பதவி வகிக்கிறார்.
மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுக்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன், எதிர்கால சமூகப் பிளவுகளைத் தடுப்பதற்காக மதநல்லிணக்கக் கூட்டங்களை ஊக்குவிப்பதும் அதன் பணியாகும். என்எப்சிஎச் சார்பில் தேசிய அளவில் மதநல்லிணக்க விருதுகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.