உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
2-வது திருமணம், லிவிங் டுகெதர் குற்றங்களுக்கு 7 ஆண்டு சிறை: உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் திருத்தம்
டேராடூன்: இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் கடந்த 2025 ஜனவரி 27 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது மதம், பாலின வேறுபாடின்றி திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் லிவ்-இன் உறவுகளுக்கு (திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது) ஒரே சட்டவிதிகளை உறுதி செய்கிறது.
இந்நிலையில் பொது சிவில் சட்டத்தில் திருத்தங்கள் செய்து அதை உத்தராகண்ட் அரசு வலுப்படுத்தியுள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாநில ஆளுநர் குர்மீத் சிங் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி கட்டாயமாகவோ அல்லது மோசடியாகவோ திருமணம் செய்வது மற்றும் லிவ்-இன் உறவில் ஈடுபடுவதற்கு கடும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தனது திருமணத்தை மறைத்து இன்னொரு திருமணம் செய்துகொள்வது அல்லது லிவ்-இன் உறவில் ஈடுபடுவது இனி கடும் குற்றமாக கருதப்படும்.
இதுபோல் லிவ்-இன் உறவில் உள்ள ஒருவர் அதை மறைத்து மற்றொரு லிவ்-இன் உறவில் ஈடுபடுவதும் கடும் குற்றமாகும். இந்த குற்றங்களுக்கு இனி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சிறாருடன் லிவ்-இன் உற வில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 6 மாத சிறை, ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
