

அசாம் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராஹா தொகுதியின் பாஜக வேட்பாளர் சஷி காந்த தாஸை ஆதரித்து அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று நாகோன் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.படம்: பிடிஐ
குவாஹாட்டி: அசாமில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் பொது சிவில் சட்டம் இயற்றப்படும் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
மொத்தம் 126 இடங்களை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி 31 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாஜக நேற்று வெளியிட்டது. குவாஹாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: அசாமில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 3 மாதங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அதேசமயம் பழங்குடியினர் உரிமைகளை உறுதி செய்ய, அவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். லவ் ஜிஹாத், நில ஜிஹாத்தை முடிவுக்குக் கொண்டுவர பயனுள்ள சட்டம் கொண்டு வரப்படும்.
அசாம் பூர்வகுடி மக்களின் நாகரிகம், பாரம்பரியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் வலுப்படுத்தப்படும். சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களைத் திருப்பி அனுப்பும் செயல்முறையைத் துரிதப்படுத்தும். சட்டவிரோத குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்படும். அசாமின் உண்மையான குடிமக்கள் அனைவருக்கும் நில உரிமைகள் வழங்கப்படும். மடங்கள், நாம்கர்கள், தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்படும்.
அசாம் மாநிலத்தை இந்தியாவின் ‘கிழக்கு நுழைவு வாயிலாக’ நிலைநிறுத்த ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்க ரூ.18,000 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பல்வேறு திட்டங்களின் மூலம் அதிக தொழில்முனைவோர் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு பல்கலைக்கழகம், ஒரு பொறியியல் கல்லூரி ஏற்படுத்தப்படும். பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
சுயஉதவி குழுக்களை சேர்ந்த 40 லட்சம் பெண்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கப்படும். அவர்களின் தினசரி ஊதியம், ரூ.500 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.