

புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, 2 இந்திய சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை நேற்று பாதுகாப்பாக கடந்தன. இந்த கப்பல்களில் ஒரு லட்சம் டன் சமையல் காஸ் இந்தியா வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கி உள்ளது.
ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் காஸ் சரக்கு போக்குவரத்தில் 85 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. அங்கு நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் கடந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது ஈரான் ராணுவம் அனுமதிக்கும் சில கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்கின்றன. கடந்த சில நாட்களில் 18-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்களை ஈரான் ராணுவம் நடுக்கடலில் வெடிகுண்டுகள் மூலம் தகர்த்து உள்ளது.
இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதுபோல வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் பலமுறை ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து கடந்த 7-ம் தேதி கத்தாரின் ராஸ் லபான் துறைமுகத்தில் இருந்து 55,000 மெட்ரிக் டன் சமையல் காஸுடன் புறப்பட்ட ஷிவாலிக் என்ற இந்திய சரக்குக் கப்பல், போர் அச்சுறுத்தல் காரணமாக பெர்சிய வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பல் ஈரான் ராணுவ அனுமதியுடன் நேற்று பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது.
இதேபோல கடந்த 1-ம் தேதி கத்தாரின் ராஸ் லபான் துறைமுகத்தில் இருந்து 46,000 மெட்ரிக் டன் சமையல் காஸுடன் புறப்பட்ட நந்தா தேவி என்ற இந்திய சரக்குக் கப்பலும் நேற்று பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இரு சரக்குக் கப்பல்களும் நாளை அல்லது நாளை மறுநாள் குஜராத்தின் முந்த்ரா, கண்ட்லா துறைமுகங்களை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.