தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
Updated on
1 min read

அகமதாபாத்: நாட்டின் பிரபல தங்க வர்த்தகரும், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் தலைவருமான பிருத்விராஜ் கோத்தாரியின் விவரங்களை இணையத்திலிருந்து சேகரித்த மோசடிக் கும்பல், ஜூலை 8 அன்று ஹைதராபாத் தொழிலதிபர் ரோஹித்குமார் ஜெயினைத் தொடர்பு கொண்டது.

தான் பிருத்விராஜ் கோத்தாரி எனப் பேசி நம்பவைத்த நபர், அவசரத் தேவைக்காக ஹைதராபாத்திலிருந்து அகமதாபாத் கலுபூர் பகுதிக்கு ‘அங்காடியா’ (பாரம்பரிய பணப் பரிமாற்றம்) மூலம் ரூ.75 லட்சம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதை நம்பிய ரோஹித்குமார், ஜூலை 9 அன்று ரூ.75 லட்சத்தை அனுப்பினார். அகமதாபாத்தில் போலிப் பெயரில் வந்த நபர் பணத்தைப் பெற்ற சில நிமிடங்களிலேயே அனைவரது போன்களும் அணைக்கப்பட்டன. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஹித்குமார் அளித்த புகார், அகமதாபாத் கலுபூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, ‘பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காவல்துறை துணை ஆணையர் ரூபல் சோலங்கி தலைமையிலான படை, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தியது.

இதில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒளிந்திருந்த முக்கியக் குற்றவாளி மோத்சிங் (48) மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்ட குஜராத்தைச் சேர்ந்த பாரத்கிரி கோஸ்வாமி (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மோத்சிங் மீது ஏற்கெனவே 26-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உள்ளன.

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
போலி இணையதளங்கள்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in