

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை உருவாக்கி பக்தர்களை சிலர் மோசடி செய்து வருகின்றனர். இணையங்கள் மட்டுமின்றி, வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களும் திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மோசடி செய்து வருகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டுமே தரிசனம், ஆர்ஜித சேவைகள், விடுதிகளை பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரையோ, சின்னத்தையோ, சமூக வலைதளத்தையோ போலியாக நிர்வகித்து வருபவர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
பக்தர்கள் தேவஸ்தான மொபைல் செயலியை உபயோகிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் வரும் பொய்யான தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். முன்பின் தெரியாத ஆட்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.