

புதுடெல்லி: தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளை மேற்கு வங்க மாநிலத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் தமிழக முதல்வர் விஜய்யின் தவெக கட்சியின் புதிய கிளை அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்.டி மற்றும் பல்வேறு மாவட்ட தவெக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து வந்த தவெக நிர்வாகியான ராஜாங்கம் என்பவர் தவெக கிளை அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்தார்.
இந்நிகழ்ச்சியில் தவெகவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் பேசும்போது, “தவெகவின் இந்த அலுவலகத்தின் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் தொடங்கியுள்ளது. தற்போதைக்கு நேரடி அரசியல் திட்டங்களுக்குப் பதிலாக சமூக செயல்பாடுகள் மூலம் சாமானிய மக்களைச் சென்றடைவதே எங்களின் முக்கிய நோக்கம்.
இதற்கான அறிவுறுத்தல், தமிழ்நாட்டின் தவெக தலைமையிடமிருந்து எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது்” என்றார். கிழக்கு பர்த்வானை அடுத்து பங்குரா, பிர்பும் மற்றும் புருலியாவிலும் விரைவில் தவெக கட்சி அலுவலகங்கள் தொடங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.