

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களாக மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்த முடிவை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கட்சிக்கு எதிராக செயல்படுவார்கள். எனவே, மாநில அரசு ஊழியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் மாநில அரசு ஊழியர்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் சட்டத்தில் இல்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஊழியர்கள் என்றாலே தவறாக நடப்பார்கள் என்ற திரிணமூல் காங்கிரஸின் எண்ணம் தவறானது. மத்திய அரசு ஊழியர்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் நம்பிக்கை வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில அரசு ஊழியர்களும் இருப்பார்கள். எனவே அச்சப்படத் தேவையில்லை. தேர்தல் ஆணையம் யாரை பணியமர்த்த வேண்டும் என்பது அதன் தனிப்பட்ட அதிகாரம். இதில் சட்டவிரோதம் ஏதுமில்லை. இவ்வாறு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், திரிணமூல் காங்கிரஸ் மனுவை முடித்து வைத்தது.