

ஹிமந்த பிஸ்வா சர்மா
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் பேரணியின்போது, மம்தா பானர்ஜிக்கு எதிராக மத ரீதியாக ஆத்திரமூட்டும் மற்றும் பிளவுபடுத்தும் கருத்துகளைத் தெரிவித்ததாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரெக் ஓ' பிரையன் அளித்த புகார் மனுவில், ‘அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஏப்ரல் 16 அன்று கூச் பெஹாரில் பிரச்சாரம் செய்தபோது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் ஆத்திரமூட்டும் வகையில் மட்டுமல்லாமல், அவதூறான தன்மையுடனும் இருந்தது. வாக்காளர்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் நோக்கில் இந்தக் கருத்துகளை அவர் கூறினார்.
மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கக்கூடும் என்பதால் மம்தா பானர்ஜி அஞ்சுவதாக ஹிமந்த சர்மா கூறினார். மேலும், அவர் மாட்டிறைச்சி நுகர்வை குறிப்பிட்ட சமூகங்களுடன் தொடர்புபடுத்தியதுடன், சில பகுதிகளில் மாடுகள் கடத்தல் மற்றும் மாட்டிறைச்சிக் கடைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தக் கருத்துகள் ஆதாரமற்றவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை ஆகும்.
ஹிமந்த சர்மாவின் இந்தக் கருத்துகள் அரசியல் விமர்சனத்தின் எல்லையைத் தாண்டி, மத வெறுப்பைத் தூண்டுவதாகவும், வகுப்புவாத நல்லிணக்கத்தைக் குலைப்பதாகவும் அமைகின்றன. இந்தக் கருத்துகள் ஒரு முழு மத சமூகத்துக்கு எதிராக வேண்டுமென்றே சந்தேகத்தையும் விரோதத்தையும் உருவாக்கி, அவர்களை பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கின்றன.
இத்தகைய சித்தரிப்புகள் தேர்தலை அமைதியாக நடத்துவதைத் தடைசெய்து, சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்’ என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மம்தா பானர்ஜிக்கு எதிராக குற்றவியல் மிரட்டல் விடுத்ததாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் ஹிமந்த சர்மா மீது திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இவை தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதுடன், இரு வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது, மத உணர்வுகளைப் புண்படுத்துவது உள்ளிட்ட பிஎன்எஸ் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.