

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை இழந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் (டிஎம்சி) சிலர் பாஜகவை அணுக முயற்சிப்பதாகத் தெரிகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சியைப் போல் திரிணமூல் கட்சி மாறுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைமை மீது முக்கியத் தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருந்தனர். அதனால், ஆம் ஆத்மியின் 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் ராகவ் சத்தா தலைமையில் திடீரென பாஜகவில் இணைந்தனர். அதே நிலை மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு டிஎம்சியில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகக் கட்சிக்குள் ஒரு பிரிவினர் வெளிப்படையாக எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
வேட்பாளர் தேர்வில் அபிஷேக் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும் அரசு நிர்வாகத்திலும் இப்பிரிவினர் அதிருப்தி அடைந்திருந்தனர். இதன் காரணமாகவே, டிஎம்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்களான ககோலி கோஷ் தஸ்திதார், பராசத் மாவட்டத் தலைவர் மற்றும் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி தலைவர்கள் பலர், பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும், அவர்களை இணைத்துக் கொள்வது குறித்து, அவரசரப்படாமல் நிதானமாக முடிவு எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டிஎம்சி தொண்டர்களை சேர்க்க பாஜக தற்காலிகத் தடை விதித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 13 எம்.பி.க்களும், மக்களவையில் 28 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்கள் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாத நிலையில், கட்சிக்குள் இனி எதிர்காலம் இல்லை என்று கருதுகின்றனர்.
இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மாநிலங்களவையில் தனிப் பெரும்பான்மையைப் பெற, டிஎம்சி மாநிலங்களவை எம்.பி.க்களைச் சேர்ப்பதைத் தவிர பாஜக.வுக்கும் வேறு வழியில்லை. மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 113 எம்.பி.க்கள் தேவை. தற்போதைக்குப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை எல்லாம் சேர்த்தால், மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளது.
டிஎம்சி எம்.பி.க்கள் இணைந்தால், பாஜக.வுக்கேத் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளது. இது நடந்தால் மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்க பாஜக மீண்டும் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.