

புதுடெல்லி: ஆட்டோ, கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் இதன் விலை நான்காவது முறையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக ஈரான் எல்லையை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்தப்பட்டது.
இதுபோல் ஆட்டோ மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கடந்த 15-ம் தேதி டெல்லி தலைநகரப் பிராந்தியத்தில் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. இதையடுத்து 22ம் தேதி 1 ரூபாயும் 24-ம் தேதி 1 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் சிஎன்ஜி எரிவாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை மாற்றத்தின்படி, டெல்லியில் தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.83.09 ஆக உள்ளது.
கடந்த 11 நாட்களில் சிஎன்ஜி விலை உயர்த்தப்படுவது இது 4-வது முறையாகும். இதன் மூலம் 11 நாட்களில் மொத்தம் ரூ.7 விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு அல்லது வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
எனினும் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தினசரி வாகனங்களை பயன்படுத்துவோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுப்பதால் பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.