ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாவின் இயக்கத்தை நிறுத்தும் போக்கு அதிகரிப்பு: பின்னணி என்ன?

ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாவின் இயக்கத்தை நிறுத்தும் போக்கு அதிகரிப்பு: பின்னணி என்ன?
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியாவின் வட மாநிலங்களில் சாலையில் செல்லும் இ-ரிக்‌ஷாக்களின் இயக்கத்தை ப்ளூடூத் மூலமாக நிறுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது டெல்லி போக்குவரத்து துறை அமைச்சகம்.

டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இ-ரிக்‌ஷாக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை தங்களது வாழ்வாதாரமாக ஆயிரக்கணக்கானோர் நம்பியுள்ளனர். இந்த சூழலில்தான் சீன தேச செயலியான ‘BAT-BMS’ செயலியை பயன்படுத்தப்படுவதாக தகவல்.

இந்த செயலி மூலம் அருகில் உள்ள இ-ரிக்‌ஷாக்களின் லித்தியம் பேட்டரியை ப்ளூடூத் மூலம் கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லித்தியம் பேட்டரியில் ப்ளூடூத் செயல்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் ‘டிஸ்சார்ஜ் சுவிட்ச்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து இ-ரிக்‌ஷா இயக்கம் நிறுத்தப்படுகிறது. சிலர் இதோடு சேர்த்து ‘சார்ஜ் சுவிட்ச்’யையும் ஆப் செய்கின்றனர். இதனால் இ-ரிக்‌ஷா இயக்கம் நிறுத்தப்படுகிறது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட விலை குறைவான பேட்டரிகளில் பாதுகாப்பு வசதிகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் 10 முதல் 15 மீட்டர் தூரத்தில் இருந்து இ-ரிக்‌ஷா பேட்டரியை கட்டுப்படுத்த முடிவதாக தகவல். இதன் மூலம் அந்த வாகனத்தின் மோட்டார் இயக்கத்துக்கு தேவையான பவர் நிறுத்தப்படுகிறது என்று வல்லுநர்கள் சிலர் விளக்கம் தந்துள்ளனர்.

இதை சிலர் வேடிக்கையாக தொடங்கியதாக தகவல். தற்போது அதன் தாக்கம் தீவிரமாகி உள்ளது. இந்த செயலியை கொண்டு கன்டென்ட் கிரியேட்டர்கள் சில வீடியோக்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். ‘Tirris’, ‘Tirri Remote Control’ என்ற டேக்கில் இந்த வீடியோக்கள் இன்ஸ்டாவில் அணிவகுக்கின்றன.

இ-ரிக்‌ஷா ஓட்டுநர்கள் கண்ணீர்

சிலரது இந்த விஷம செயலால் தங்களது தினசரி தொழில் பாதிக்கப்படுவதாக இ-ரிக்‌ஷா ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இ-ரிக்‌ஷாக்களை வாடகைக்கு எடுத்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இ-ரிக்‌ஷாவுக்கான வாடகையை கூட செலுத்த முடியவில்லை என்று கலங்குகின்றனர்.

விசாரணையை தொடங்கிய டெல்லி போக்குவரத்து துறை

இந்த செயலி தொடர்பாக டெல்லி போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கி உள்ளது. இது குறித்து அந்த துறையின் அமைச்சர் பங்கஜ் சிங் மற்றும் அதிகாரிகள் விவாதித்துள்ளனர். மேலும், சர்ச்சைக்குரிய சீன செயலி மற்றும் பேட்டரியின் பாதுகாப்பு தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த செயலியை தடை செய்வது குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒருவர் கைது

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் நிறுத்தப்பட்ட இ-ரிக்‌ஷாக்களின் இயக்கத்தை இரவு நேரத்தில் இந்த செயலி மூலம் நிறுத்தவிட்டு, விடிந்ததும் சம்மந்தப்பட்ட இ-ரிக்‌ஷாவின் ஓட்டுநரிடம் தொழில்நுட்ப வல்லுநர் என சொல்லி, மீண்டும் செயலி மூலம் இயக்க செய்து, அதற்கு கட்டணமாக ரூ.300 வரை பெற்று வந்த 18 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் காவலில் எடுத்து, விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாவின் இயக்கத்தை நிறுத்தும் போக்கு அதிகரிப்பு: பின்னணி என்ன?
போஸ்னியாவை எளிதாக வீழ்த்தியது அமெரிக்கா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in