சத்தீஸ்கர்: நக்சல்கள் காட்டில் கொட்டி கிடக்கும் சுற்றுலா தலங்கள்

ஒளிர செய்யும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்
சத்தீஸ்கர்: நக்சல்கள் காட்டில் கொட்டி கிடக்கும் சுற்றுலா தலங்கள்
Updated on
3 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதிப்பு இருந்த பஸ்தரின் அடர்ந்த காடுகள் இப்போது இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களாக மாறி வருகின்றன. இந்த இடங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எளிதாகச் சென்று வர, சத்தீஸ்கர் மாநிலத்தை ரசிக்க மீண்டும் அரசு போக்குவரத்துக் கழகம் உருவாக்கி தடையில்லா பேருந்து வசதி, தங்குமிட வசதி, உணவகங்களும் உருவாக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் என்றாலே நக்சல்களை அடையாளப்படுத்தியே நாடு முழுவதும் அறியப்படுகிறது. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்கம், வைரம் முதல் நிலக்கரி, இரும்பு வரை கனிம வளம், இயற்கை வளம் கொட்டிக் கிடக்கிறது. சுதந்திர இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த சத்தீஸ்கர் 2000-ம் ஆண்டில் தனி மாநிலமாக உதயமானது.

இம்மாநிலத்தில் இல்லாத வளங்களே இல்லை என்று சொல்லலாம். அருவிகள், குகைகள், நூற்றாண்டுகள் பாரம்பரியமுள்ள பழங்குடியினர் கலாச்சாரம், ஆன்மிகம், சுதந்திரப் போராட்ட வரலாற்று நிகழ்வுகள் போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு முகம் வெளியுலகுக்கு தெரியாமலேயே உள்ளது.

நக்சல்களுக்கு முடிவு கட்டிய மத்திய அரசும், மாநில அரசும், தற்போது சத்தீஸ்கரில் வளர்ச்சியால் நீடித்த அமைதியையும், பள்ளிகளை தொடங்கி புதிய தலைமுறைகளையும், மருத்துவமனைகளை அமைத்து மக்களுக்கு நம்பிக்கையையும், சாலைகளை அமைத்து சந்தைகளையும், சுற்றுலா தலங்களையும் ஏற்படுத்தி வாழ்வாதாரத்தையும், வங்கிகளை அமைத்து பொருளாதார சுதந்திரத்தையும், இணைய இணைப்பு வழங்கி உலகுடனான தொடர்புகளையும் உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை விதைக்க தொடங்கி இருக்கிறது.

சுற்றுலா தலங்களில் கொண்டாட் டத்துடன் திரளும் மக்கள் கூட்டத்தை பார்க்கிறபோது, நக்சலிசம் முடிவுக்கு வந்திருப்பது வெறும் ஆவணங்களிலும் அறிக்கைகளிலும் மட்டுமல்லாமல், நேரடியாக களத்தில் அதன் தாக்கம் தெளிவாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது.

நக்சல் தாக்குதல் காரணமாக, 2003-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மினி லாரிகள், ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களையே பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சாலை வசதியில்லாத கிராம மக்கள் நடந்தே செல்கின்றனர்.

மக்களின் சிரமங்களை போக்க, சத்தீஸ்கர் மாநில அரசு, புதிய சாலைகளை அமைப்பதும், தனியாருக்கு அவர்கள் கேட்கும் பேருந்து வழித்தடங்களை வழங்கியும் பேருந்துகளை இயக்க அனுமதிக்கின்றனர். நக்சல் பாதிப்புக்குள்ளான பஸ்தர் மண்டல மாவட்டங்களில் வனப்பகுதி சாலைகள் வழியாக தற்போதும் மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகளை இயக்க அனுமதியில்லை.

சத்தீஸ்கர் மாநில மக்களின் ஒட்டுமொத்த சிரமங்களை போக்கும் வகையில், அம்மாநில அரசு, தனியார் பங்களிப்புடன் பேருந்துகளை இயக்க தொடங்கியிருக்கிறது. இந்த திட்டத்தை, அரசு போக்குவரத்து செயலராக இருக்கும் மதுரை மாவட்டம் அய்யர் பங்களா பகுதியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் என்பவர்தான் முழு முயற்சி எடுத்து சத்தீஸ்கர் மக்களின் 40 ஆண்டு பொது போக்குவரத்து கனவை நிறைவேற்றி உள்ளார்.

இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் கூறியதாவது: நக்சலைட்கள் அச்சுறுத்தலால் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அரசு நேரடியாக கடந்த காலங்களில் பேருந்துகளை இயக்கவில்லை. சாலைகளின் நடுவில் பள்ளங்களை தோண்டி பொது போக்குவரத்தை முடக்கினர். கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தனர். மக்களும் போக்குவரத்தை பயன்படுத்த முன் வராததால் 2003-ம் ஆண்டுக்கு பிறகு அரசு போக்குவரத்துக் கழகம் செயல்படவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராமங்கள் நெருக்கமாக இல்லை. ஒரு கிராமத்துக்கும், மற்றொரு கிராமத்துக்கும் அதிக தொலைவு உள்ளது. வீடுகளும் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக 100 முதல் 200 மீட்டர் இடைவெளியில் தனித்தனியாக உள்ளன.

கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கினாலும், வருவாய் இல்லாததால் தனியார் நேரடியாக பேருந்துகளை இயக்க ஆர்வம் காட்டவில்லை. கிராமப் பகுதி மக்கள் பயனடையும் வகையில் அரசே தற்போது மானிய உதவி வழங்கி தனியார் பேருந்துகளை இயக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

முதல்வர் கிராமப் பேருந்து சேவைத் திட்டம் (Chief Minister Rural Bus Service Scheme) தொடங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மூலம் பழங்குடியினர் மற்றும் போக்குவரத்து வசதியற்ற கிராமங்களுக்குப் பேருந்து இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் தனியார் பேருந்துளை இயக்க ஒப்பந்தம் எடுப்போருக்கு முதல் ஆண்டு ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.26 நிர்ண யித்துள்ளோம். 2-வது ஆண்டு, ரூ.24, 3-வது ஆண்டு ரூ.22 வழங்குகிறோம்.

தற்போது 700 கிராமங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சர்குஜா, பஸ்தர் மண்டலங்களில் உள்ள 14 மாவட்டங்களில் 108 பேருந்துகளை, இந்த திட்டத்தில் அரசு சார்பில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் இந்த பேருந்துகளை இயக்க ரூ.4 கோடி வழங்கினோம். இந்த நிதியாண்டில் பேருந்துகள் இயக்கத்தை கூடுதலாக்கி இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கி உள்ளோம் என்று கூறினார்.

பேரருவிகள், பசுமை நிறைந்த பூமி

சத்தீஸ்கர் ஆளுநரின் செயலரும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரியுமான பிரசன்னா கூறியதாவது: மத்திய அரசால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் முக்கியமான சுற்றுலா மையமாக பஸ்தர் திகழ்கிறது. சித்ரகூட் அருவி (இந்தியாவின் நயாகரா), தீர்த்தகர் அருவி உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கொண்ட பஸ்தர், ‘அருவிகளும் பசுமையும் நிறைந்த பூமி’ என்று அழைக்கப்படுகிறது. மலைப்பயணம் (Trekking) – இந்தியாவின் மிகவும்பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளையும், சாகச மலைப்பயணப் பாதைகளையும் பஸ்தர் கொண்டுள்ளது.

<div class="paragraphs"><p>பிரகாஷ்,&nbsp;பிரசன்னா</p></div>

பிரகாஷ், பிரசன்னா

குறிப்பாக, தந்தேவாடாவில் உள்ள தோல்கல் (Dholkal) முக்கியமான மலையேற்றத் தலமாகும். பழங்குடியினரின் கலாச்சாரமாக பார்க்கப்படும் உலகின் மிக நீண்ட காலம் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றான “பஸ்தர் தசரா” ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 75 நாட்கள் நடைபெறுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் “மா தந்தேஸ்வரி கோயில்” உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் பஸ்தரின் ஆன்மிகப் பெருமையை எடுத்துக்காட்டுகின்றன என்று கூறினார்.

- சத்தீஸ்கரில் இருந்து ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சத்தீஸ்கர்: நக்சல்கள் காட்டில் கொட்டி கிடக்கும் சுற்றுலா தலங்கள்
ஒழிக்கப்பட்ட நக்சல்கள்... வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in