

ஒரு காலத்தில் ஓயாத துப்பாக்கி சத்தமும், இடைவிடாத கண்ணி வெடித் தாக்குதல்களும்,வன்முறைகளும் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமைதி திரும்பி அம்மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதிப்பு 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தே வேரூன்றத் தொடங்கியது. 1967-ல் மேற்கு வங்கத்தில் தொடங்கிய நக்சல் இயக்கம், பிற்காலத்தில் அடர்ந்த காடுகள், மலைகள் நிறைந்த பஸ்தார் பகுதி வழியாக சத்தீஸ்கருக்குள் நுழைந்து தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சுற்றி நக்சல்கள் பரவலாக இருந்த மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் எல்லைகள் உள்ளன.
நக்சலைட்கள், இந்த மாநிலங்களுக்கு எளிதாகச் சென்று வரவும், அடர்வனங்களில் பதுங்கவும் வசதியாக, சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மண்டலம் இருந்தது. அதனால், 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பஸ்தர் நக்சலைட்டுகளின் (மாவோயிஸ்டுகள்) கோட்டையாகவும், முக்கிய வியூக மைய மாகவும், அந்த இயக்கத் தலைவர்களின் தலைமையிடமாகவும் செயல்பட்டது.
பஸ்தர் மண்டலத்தில் உள்ள பஸ்தர், பீஜாப்பூர், தந்தேவாடா, சுக்மா, நாராயண்பூர், காங்கேர், கொண்டகாவ் ஆகிய 7 மாவட்டங்களில் நக்சலைட்களின் ஆதிக்கத்தால், சத்தீஸ்கர் மாநில அரசுக்கு இணையாக அவர்கள் மற்றொரு அரசாங்கமே நடத்தி வந்தனர்.
அவர்களை மீறி கல்வி, சாலை, சுகாதாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட எந்த அரசு திட்டங்களையும், மாநில அரசு இந்த மாவட்டங்களில் செயல்படுத்த முடியவில்லை.
ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரை, நக்சல் பாதித்த மாவட்டங்களில் தங்கியிருந்து பணி புரிவது சவாலாக இருந்தது. தற்போது நக்சல்கள் ஒழிக்கப் பட்ட பிறகும், பஸ்தர் அடர் வன கிராமச் சாலைகளில் தினமும் துணை ராணுவப் படை வீரர்கள் கண்ணிவெடி சோதனைகளையும், சாலை ரோந்துப் பணிகளையும் இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பஸ்தர் மாவட்ட எஸ்பி ஷலப் சின்ஹா கூறியதாவது: சத்தீஸ்கரில் கடந்த 25 ஆண்டுகளில் நக்சல் தீவிரவாதம் தொடர்பாக 11,700-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நக்சல்கள் தாக்குதலால் சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை 1,455 பாதுகாப்புப் பணியாளர்கள், 64 அரசு ஊழியர்கள் மற்றும் 1,922 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அடிக்கடி நடந்த கண்ணிவெடித் தாக்குதல்கள், பாதுகாப்பு முகாம்கள் மீதான பெரிய அளவிலான தாக்குதல்கள் மற்றும் கல்வி உள்கட்டமைப்புகளின் அழிவு போன்றவற்றால் 2004 முதல் 2014 வரை கிராமங்களில் அரசு நிர்வாகத்தின் நேரடி தொடர்பு குறைந்திருந்தது.
சாலைகள் அமைப்பது, பள்ளிகளைத் தொடங்குவது, அரசு திட்டங்களை செயல்படுத்துவது சவாலாக இருந்ததால், பஸ்தர் மண்டலத்தில், சத்தீஸ்கரின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தி்ல் பெரிய இடைவெளி காணப்பட்டது.
நக்சல்களை ஒடுக்க, பஸ்தர் மாவட்டத்தில் மட்டும் 106 ஆயுதம் ஏந்தியசிறப்பு பாதுகாப்பு படைகள் (சிஆர்பிஎஃப்) நிறுத்தப்பட்டிருந்தன. 2024 முதல் 2026-ன் நடுப்பகுதி வரையிலான எங்களுடைய வியூகத் தாக்குதல், ஆட்டத்தின் போக்கையே முற்றிலும் மாற்றியமைத்தது.
ஆயுதங்களை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பெண் நக்சல்கள், அவர்கள் குடும்பத்தினருக்கு சத்தீஸ்கர் மாநில அரசு உதவியுடன் திருப்பூர் நிறுவனம் தையல் பயிற்சியும், ஆடைகளை உற்பத்தி செய்யும் வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறது.
மாநிலத்தின் அனைத்து எல்லைகள் வழியாக நக்சல் ஊடுருவல், அவர்களுக்கு உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் செல்வதை முற்றிலும் தடுத்து அவர்களை செயலிழக்க செய்தோம். அவர்களுக்கு இரண்டே வாய்ப்புகளை வழங்கினோம்.
ஒன்று சரணடைந்து மறுவாழ்வு தேடிக்கொள்வது, மற்றொன்று வீழ்வது. இதன் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் நக்சலைட்கள் அதிகளவில் சரணடைந்தனர். பஸ்தர் பகுதியில் மட்டுமே 2024-25 ஆண்டில் 454 நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர். 2026 மார்ச் மாதத்துடன் நக்சல்கள் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் அறிவிக்கப்பட்டு விட்டது என்று கூறினார்.
நக்சல்கள் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த 7 மாவட்டங்களிலும் சாலை, பேருந்து போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், தொலைத்தொடர்பு, வங்கி சேவை, ரேஷன் கடைகள், சுற்றுலா மற்றும் கல்வி வசதிகள் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளன.
சத்தீஸ்கர் மக்கள் அரை நூற்றாண்டுக்குப் பிறகு அரசின் பக்கம் நிற்க ஆரம்பித்துள்ளதால் ஓயாத துப்பாக்கிச் சத்தம் கேட்ட பஸ்தர் மண்டலத்தில் தற்போது மக்கள் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர்.
எஸ்பி ஷலப் சின்ஹா
சத்தீஸ்கர் மக்களின் இன்றைய மனமாற்றத்துக்கும், அதன் முன்னேற்றத்தின் பின்னணியிலும் நக்சல்கள் உச்சமாக இருந்த காலகட்டத்தில் தைரிய மாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் எஸ்.பிரகாஷ் (செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையர்), சி.ஆர் பிரசன்னா (தற்போது ஆளுநரின் செயலர்), ஐபிஎஸ் அதிகாரி சுந்தரரராஜ் போன்றவர்களின் பங்கு அளப்பரியது.
5 கி.மீ.க்கு ஒரு இடத்தில் துணை ராணுவ மையம்: நக்சல்களின் முதல் தாக்குதலே, சாலைப் போக்குவரத்தை முற்றிலும் துண்டிப்பதுதான். அதையும் மீறி சாலை போட முயற்சித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர், பணிபுரியும் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.
அதனால், நாடு விடுதலை அடைந்து 79 ஆண்டுகளாகியும் பஸ்தர் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு தற்போது வரை சாலை வசதிகளே இல்லை. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு, நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த பஸ்தர், பீஜாப்பூர், தந்தேவாடா, சுக்மா, நாராயண்பூர், காங்கேர், கொண்டகாவ்ன் மாவட்டங்களில் ஒவ்வொரு 5 கி.மீ. முதல் 10 கி.மீ. இடைவெளியில் மத்திய சிஆர்பிஎஃப் (CRPF) துணை ராணுவ மையங்களை நிறுவி, மக்களுக்கு பாதுகாப்பையும், நக்சலைட்களை ஒடுக்கும் பணியிலும் ஈடுபடத் தொடங்கினர்.
சரணடைந்த நக்சலைட்களுக்கும், அந்த அமைப்பின் தலைவர்களுக்கும் அரசு ரூ.1 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை உதவித்தொகை வழங்கி விவசாயம், தொழில்களை மேற்கொள்ள மறுவாழ்வு அளித்தது. அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி, குடும்பத்தினருக்கு தொழில்பயிற்சி வழங்கி அன்றாட வாழ்வாதாரத்துக்கும் அரசு ஏற்பாடு செய்தது.
- சத்தீஸ்கரில் இருந்து ஒய்.ஆண்டனி செல்வராஜ்