“மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளில் 226+ வெற்றி உறுதி!’’ - மம்தா பானர்ஜி நம்பிக்கை

“மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளில் 226+ வெற்றி உறுதி!’’ - மம்தா பானர்ஜி நம்பிக்கை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் 226 தொகுதிகளுக்கு மேல் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இதனை அறிவித்தார்.

அப்போது அவர் கூறியது: “மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) போட்டியிடுகிறது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் டார்ஜிலிங் மலைப் பகுதியில் உள்ள எங்கள் கூட்டணி கட்சியான அனித் தாபா தலைமையிலான பாரதிய கோர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா போட்டியிடும்.

இந்த தேர்தலில் எங்கள் கட்சி 226 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறும். வேட்பாளர் பட்டியலில் இடம்பிடிக்காத கட்சித் தலைவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் கட்சி அமைப்புக்குள் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த தேர்தலில் பாஜகவின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். அவர்களின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஏப்.23, 29 தேதிகளில் மேற்கு வங்க தேர்தல்:

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இரண்டாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 13ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளில் 226+ வெற்றி உறுதி!’’ - மம்தா பானர்ஜி நம்பிக்கை
தத்துக் குழந்தை வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு: உச்ச நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in