

புதுடெல்லி: தத்தெடுக்கும் குழந்தையின் வயது எத்தகையதாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தத்தெடுக்கும் தாய், மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4)-ஐ எதிர்த்து வழக்கறிஞர் ஹம்சா நந்தினி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பை அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில், ‘‘மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4), அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆகிய சரத்துகளுக்கு முரணானது. எனவே, சட்டப்பிரிவு 60(4) ரத்து செய்யப்படுகிறது’’ என தெரிவித்துள்ளது.
மேலும், தாய்க்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பை (maternity leave) போல, தந்தைக்கான விடுப்பையும் (paternity leave) சமூக பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் வகையில் ஒரு சட்ட விதியை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.