

கொல்கத்தா/பாட்னா: மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு கடந்த சனிக்கிழமை பதவியேற்றது. இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்களும் - அவை 10 ஆண்டுக்கு முன் அல்லது 30 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டவையாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். எனினும், இறந்தவர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் அல்லது இந்தியர் அல்லாத எவரும் மேற்கு வங்க மக்களுக்கான நலத் திட்டங்களை பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.
இந்நிலையில் எஸ்ஐஆர் நடவடிக்கையின் கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. எனினும் எஸ்ஐஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தவர்களுக்கு அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை நலத்திட்ட உதவி தொடரும். அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க உணவு வழங்கல் துறை அமைச்சர் அசோக் கீர்த்தனியா கூறுகையில் “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் அனைத்து அரசு திட்டங்களையும் பெறலாம். ரேஷன் அட்டைகள் சரிபார்க்கப்படும்” என்றார்.
இதுபோல் பிஹார் தலைநகர் பாட்னாவில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில் “பிஹாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், ரேஷன் பொருட்கள், பிற நலத்திட்டங்கள் உட்பட எந்தவொரு அரசு சலுகையையும் பெற முடியாது. இவர்களின் வங்கி பாஸ் புத்தகங்களும் உரிய காலத்தில் ரத்து செய்யப்படும்” என்றார்.
பிஹார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி கூறுகையில், “மாநிலத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு, ரேஷன் அட்டைதாரர்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்” என்றார்.