“போராடும் மாணவர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியால் சுடுவது இதுவே முதன்முறை” - தேஜஸ்வி கண்டனம்

தேஜஸ்வி யாதவ் |கோப்புப் படம்

தேஜஸ்வி யாதவ் |கோப்புப் படம்

Updated on
2 min read

புதுடெல்லி: “மாணவ போராட்டக்காரர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொண்டு சுடுவது நாட்டிலேயே இதுதான் முதன்முறை.” என பிஹார் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளில் மாணவர் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புக்கு ஆதரவாக இடதுசாரி மாணவர் அமைப்புகள் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையில் முடிந்தன.

பிஹாரின் சிவான் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்க் மீது காவலர் ஒருவர் ஏகே 47 ரக துப்பாக்கி கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இது குறித்து பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிஹாரில் மாணவ போராட்டக்காரர்கள் மீது காவல் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார். மாணவ போராட்டக்காரர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொண்டு சுடுவது நாட்டிலேயே இதுதான் முதன்முறை.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு ஜனநாயகத்தில் மக்களுக்கு அரசியலமைப்பு உரிமை உள்ளது. இத்தகைய போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மீதும் பாஜக அரசுகள் ஏகே 47 துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுமா?

நாளை, எந்த ஒரு காவல் அதிகாரியும் எந்தவொரு தலைவர், அமைச்சர், முதல்வர் மீதும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக துப்பாக்கிச்சூடு நடத்த முடியுமா?

இத்தகைய சூழலில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மட்டுமே குற்றவாளியாகக் கருதப்படுவாரா? அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டாமா?

இதில், உள்துறை அமைச்சரின் பொறுப்புணர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், மாநிலங்களில் அராஜகம் தலைதூக்கும். பிகாரின் முதல்வராக இருப்பவர் குற்றப் பின்னணி கொண்டவர். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, திணிக்கப்பட்டுள்ளார்.

7 கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரான அவர், அனைத்து ஜனநாயக மரபுகளையும் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே 47 ரக துப்பக்கிகளால் சுட உத்தரவிட்ட குற்றவாளி ஆவார்.

மாணவர்களுடன் உடன்பாடு எட்டப்பட்ட பிறகும், பிஹாரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், என்டிஏ அரசு அதற்கான கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் இதைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக கொடூரமான முறையில் உயிரைப் பறிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. பிஹாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கிகளால் சுடப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என்றும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னானது? வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதில், அவர்கள் மீது கொடிய தாக்குதல்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. பிகாரிலோ ஏகே 47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார், டெல்லி என எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியான போக்குதான் காணப்படுகிறது.

நான் முன்பே கூறினேன். இந்த அரசு நேர்மையற்றது. உண்மையான சீர்திருத்தங்களைச் செய்யும் திறன் இவர்களுக்கு இல்லை. இவர்கள் தங்கள் வார்த்தைகளை மீறுவார்கள். மாணவர்களின் குரலை ஒடுக்க எல்லாவிதமான தந்திரங்களையும் கையாள்வார்கள்.

பிரதமர் மோடி அவர்களே, நாட்டின் மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். மாணவர்களைத் தாக்கி ஒடுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். மாறாக, மாணவர்கள் மீது எடுக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார் ஜா தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>தேஜஸ்வி யாதவ் |கோப்புப் படம்</p></div>
வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in